அனுபவங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. ஓய்வு பெற்ற காவல் துறையினரின் உருக்கமான வேண்டுகோள்...

தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கத்தின் தேனி மாவட்ட கிளையின் இரண்டாவது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.

Update: 2023-03-18 16:03 GMT

தேனி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்கவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவலர்கள் நலச்சங்கத்தின் தேனி மாவட்ட கிளையின் இரண்டாவது ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. தேனி மாவட்ட தலைவர் நல்லமுத்து தலைமை வகித்தார். துணைத் தலைவர் அழகர்சாமி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

தலைமை ஆலோசகர்கள் அறிவானந்தம், சுருளியாண்டி, பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர். விழாக்குழு தலைவர் கிருஷ்ணன் வரவேற்றார். தேனி மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் ரத்தினசபாபதி நிதி நிலை அறிக்கை வாசித்தார். தேனி மாவட்ட துணைத்தலைவர் தனுஷ்கோடி தீர்மானங்களை வாசித்தார்.

தேனி டி.எஸ்.பி., பார்த்திபன், சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., கார்த்திக், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகானந்தம், தேனி இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் அருண்குமார், தேனி எஸ்.பி.ஐ., வங்கி முதன்மை மேலாளர் ரெங்கராஜன், மாவட்ட கருவூல அலுவலர் லிங்கப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளி, மாவட்ட கூடுதல் கருவூல அலுவலர் கல்யாணி உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

ஓய்வு பெற்ற போலீசாரோ, அதிகாரிகளோ இறந்தால் அவர்களுக்கு கேரள அரசை போல் முழு போலீஸ் மரியாதை வழங்கி இறுதிச்சடங்கு செய்ய தமிழக அரசு உத்தரவிட வேண்டும். போலீஸ்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் அரசு பஸ்களில் பயணம் செய்ய கட்டண சலுகை அல்லது இலவச பயண அட்டை வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற போலீசார் நலச்சங்க அலுவலகம் கட்ட மாவட்ட கருவூலத்துறை ஏழு சென்ட் இடம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற காவலர்களின் குடும்ப நல நிதி 50 ஆயிரம் ரூபாயில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.

ஓய்வூதியவர்களுக்கு 70 வயதை கடந்தவுடன் 10 சதவீதம் ஓய்வூதிய நிதி கூடுதலாக வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியர் மாதத்தின் எந்த தேதியில் இறந்தாலும் அந்த மாதத்திற்கு உரிய ஓய்வூதிய நிதி வழங்கப்பட வேண்டம். எல்.டி.ஏ., என்படும் குடும்ப ஓய்வூதிய நிதியும் வழங்கப்பட வேண்டும்.

காவலர் பயிற்சி பள்ளிகளில் புதிய காவலர்கள், காவல் அதிகாரிகளின் மதிநுட்பத்தை அதிகப்படுத்த ஓய்வு பெற்ற காவலர்கள், அதிகாரிகளை பயன்படுத்தி, அவர்களது அனுபவங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஓய்வூதியர்களின் குறைகளை அரசுத்துறைகள் உடனுக்குடன் தீர்த்து வைக்க வேண்டும்.

ஓய்வு பெற்ற காவல்துறையினரின் வாரிசுகளுக்கு போலீஸ் கேண்டீன்களில் பணி வழங்க வேண்டும். மாவட்ட அளவில் காவல் நலவாரிய குழுக்கள் அமைக்கப்படும் போது, அதில் ஓய்வூதியர்களின் பிதிநிதிகளுக்கும் இடம் அளித்து மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News