இன்று தமிழக அரசின் பட்ஜெட் புதிய அறிவிப்புகள் வருமா?
Tamilnadu Budget Announcement நிதி அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பின்னர் இன்று தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.;
Tamilnadu Budget Announcement
தேர்தலை முன்னிறுத்தி புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. 2024–25ம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் தமிழக அரசு தயாரித்து அளித்த உரையின் முதல் பத்தியை மட்டும் படித்த நிலையில், கூடுதலாக இணைத்து படித்தவை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
தமிழக அரசு தயாரித்து அளித்த தமிழ், ஆங்கில உரைகள் மட்டும் அவைக்குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து, பிப்.13ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14ம் தேதியும் விவாதம் தொடர்ந்து நடைபெற்ற நிலையில், பிப்.15ம் தேதி முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரையாற்றினார்.
இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது, 2024–25-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
தொடர்ந்து, பிப்.20ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். இதனைத் தொடர்ந்து, பிப்.20ம் தேதி முதல் 2 பட்ஜெட்கள் மீதான விவாதமும் தொடங்குகிறது. பிப்.21-ம் தேதி காலை மற்றும் மாலை என 2 வேளைகளும் பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
அதன்பின், பிப்.22–ம்தேதி விவாதத்துக்கு இரு அமைச்சர்களும் பதிலளிக்கின்றனர். தொடர்ந்து, நிதி ஒதுக்கத்துக்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
இந்தாண்டு நிதியமைச்சராக தங்கம் தென்னரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு பட்ஜெட்டில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தேர்தலை முன்னிறுத்தி புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.