திருவிழாக்களால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் திளைக்கும் தமிழ்நாடு
தேர்தல் திருவிழா, கோயில் திருவிழா, மதவிழாக்கள் என ஒட்டுமொத்த தமிழ்நாடே சந்தோஷத்தில் திளைத்து வருகிறது.
தமிழகத்தில் ஓட்டுப்பதிவிற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் அனல் பறக்கிறது. ஓட்டு சேகரிப்பு, பொதுக்கூட்டம், தேர்தல் அலுவலகம், பூத்கமிட்டி அமைத்தல், பூத் கமிட்டி, ஓட்டு சேகரிப்புக்கு பட்டுவாடா என அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் கலகலவென உள்ளனர். நகரம், கிராமம், மெயின் ரோடு, சந்துகள் என எந்த பாகுபாடும் இன்றி ஓட்டு சேகரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
மற்றொரு புறம், தமிழகத்தில் இப்போது கோயில் திருவிழா சீசன். குலதெய்வம் முதல் அத்தனை தெய்வங்களுக்கும் மக்கள் விழா கொண்டாடும் சீசன் தொடங்கி உள்ளது. ஒவ்வொரு கோயில் விழாவும் குறைந்தபட்சம் 3 நாள் முதல் அதிகபட்சம் 5 நாள், ஒரு மாதம் வரை நடக்கிறது. இதனால் கிராமம், நகர பகுதிகளில் கோயி்ல் கொண்டாடும் இடங்களில் கலர், கலராக சீரியல் பல்புகள், ஸ்பீக்கர்கள், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், முளைப்பயிர் எடுத்தல், பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்தல், பால்குடம் எடுத்தல் என அத்தனை கிராமம், நகர் பகுதிகள் தடபுடலாக இருக்கின்றன.
ஆக தமிழகத்தில் எங்கு திரும்பினாலும், சில மீட்டர் இடைவெளியில் பிரச்சார களேபரமோ, கோயி்ல் கொண்டாட்டமோ பார்த்து விடலாம். ஒரு ஊரில் இரண்டு அல்லது நான்கு கி.மீ., பயணித்தால் குறைந்தது 10 இடங்களிலாவது ஏதாவது ஒரு கொண்டாட்டத்தை பார்க்கலாம்.
இந்த கொண்டாட்டம் மிகப்பெரிய பணச்சுழற்சியை தமிழகத்தில் உருவாக்கி உள்ளது. கோயில், தேர்தல் சார்ந்த தொழில்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஓட்டல் தொழிலும், டீக்கடை தொழிலும், பேக்கரி தொழிலும் ரெக்கை கட்டிப்பறக்கிறது. ஆட்டு இறைச்சி விலை கிலோ சராசரியாக ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 200 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. இதற்கு
இணையாக டாஸ்மாக் கடைகளிலும் வியாபாரம் உச்சத்தை தாண்டி சென்று விட்டது என்பது தான் வேதனையான விஷயம். ஏப்., 19ம் தேதி இரவு 7 மணியுடன் தேர்தல் திருவிழா முடிவுக்கு வந்தாலும், கோயில் கொண்டாட்டங்கள் வைகாசி மாதம் வரை நடைபெறும். எனவே கொண்டாட்டங்களுக்கும், பணச்சுழற்சிக்கும் பஞ்சம் இருக்காது.