தமிழ்நாடு எட்டு லோக்சபா தொகுதிகளை இழக்கும்
தொகுதி மறுவரையறை செய்யப் படும் போது தமிழகம் 8 மக்களவை தொகுதிகளை இழக்கலாம் என ஆய்வறிக்கையில் தகவல்
மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின், மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும்போது, தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், உத்தர பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் கார்னேஜ் மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: தென் மாநிலங்களவை விட, வடமாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கிறது. 2026-ம் ஆண்டுக்குப்பின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்பு தொகுதி மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்படும். மக்கள் தொகை எண்ணிக்கை அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்படும்.
அப்போது உத்தர பிரதேசத்துக்கு 11 மக்களவை தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். தமிழகத்தில் 8 மக்களவை தொகுதிகள் வரை குறைந்து 31 மக்களவை தொகுதிகளாக மாறலாம். 42 தொகுதிகள் உள்ள ஆந்திரா, தெலங்கானாவில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 34 ஆக குறையலாம்.
இதேபோல் கேரளாவிலும் மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 20-லிருந்து 12-ஆக குறையலாம். கர்நாடகாவில் மக்களவை தொகுதிகள் 28-லிருந்து 26-ஆக குறையலாம். தொகுதி மறுவரையறையின் முக்கிய நோக்கமே, ஒவ்வொரு தொகுதியிலும், ஓரளவு சமமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் இருப்பதை உறுதி செய்வதுதான். அப்போதுதான், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் நியாயமான பிரதிநிதித்துவம் இருக்கும் தொகுதி மறுவரையால் உ.பி.க்கு 11 தொகுதிகளும், பிஹாருக்கு 10 தொகுதிகளும், ராஜஸ்தானுக்கு 6 தொகுதிகளும், மத்திய பிரதேசத்துக்கு 4 தொகுதிகளும், குஜராத், ஹரியாணா, ஜார்க்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதிகள் அதிகரிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.