தேனியில் திடீரென கொட்டி தீர்த்த மழை
தேனியில் திடீரென பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.;
தேனியில் கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாலை நேரங்களில் லேசான காற்றுடன் மேகமூட்டம் காணப்பட்டது. இன்றும் மாலை ஐந்தரை மணிக்கு மேல் லேசான காற்றுடன் மேகமூட்டம் காணப்பட்டது.
பின்னர் காற்றின் வேகம் மெல்ல, மெல்ல அதிகரித்தது. ஆறு மணி பதினைந்து நிமிடத்தை கடந்த நிலையில் காற்றின் வேகம் அதிகரித்து சூறாவளியாக மாறியது. பலத்த காற்றின் காரணமாக ஏராளமான மரங்கள் உடைந்து விழுந்தன. மில்கள், தொழிற்சாலைகளில் போடப்பட்டிருந்த தகரங்களை காற்று துாக்கி வீசியது. பிளக்ஸ்கள், பேனர்கள் சாயந்தன. நகரில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
தொடர்ந்து அரைமணி நேரத்தையும் தாண்டி நீடித்த மழையால் ரோடுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை நின்ற பின்னர் அரைமணி நேரம் கழித்தே மீண்டும் மின் இணைப்பு கிடைத்தது. மழையை மக்கள் மகிழ்வுடன் வரவேற்றாலும், எதிர்பாராத பலத்த காற்று மக்களை மிரட்டி விட்டது.