ஒரு தலைப்பட்சத்தின் உச்சம்: மத்திய நீர்வளக்கமிட்டியின் மாற்றாந்தாய் மனப்பான்மை

உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருப்பது ஒரு தலைப்பட்சத்தின் உச்சம். -விவசாயிகள் வேதனை.

Update: 2022-02-24 02:40 GMT

முல்லை பெரியாறு அணை பைல் படம்.

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ஆர்.,தேவர், முதன்மை செயலாளர் இ.சலேத்து, செயலாளர் பொன்.காட்சிக்கண்ணன், பொருளாளர் எஸ்.பி.,லோகநாதன், ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் ஆகியோர் கூறியதாவது:

சம்பந்தமே இல்லாமல் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறது மத்திய நீர்வள ஆணையம். இதுபற்றி விசாரித்த வரையில் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக ராஜஸ்தானிலிருந்து தேர்வு செய்யப்பட்ட மலையாளியும், பிரபல கல்குவாரி அதிபருமான அல்போன்ஸ் கண்ணந்தானத்தின் வேலைதான் இது என்று உறுதியாக கூற முடியும்.

முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக மறு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் மற்றும் கண்காணிப்பு குழு அறிக்கை தாக்கல் செய்திருப்பதற்கு பின்னால் இந்த அல்போன்சை போல ஆயிரக்கணக்கான மலையாள அல்போன்ஸ்கள் இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியும். ஆனால் அதை இந்த நேரத்தில் எழுப்ப வேண்டிய தேவையும் அவசியமும் எங்கே வந்தது. அணையின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் அதனுடைய கட்டமைப்புகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டு, அணையின் பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருப்பது ஒரு தலைப்பட்சத்தின் உச்சம்.

முல்லைப் பெரியாறு அணை பலமாக இருக்கிறது என்று தொடர்ந்து கூறி வரும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை முற்றிலும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கும், இடதுசாரி கேரளாவுக்கு துணை போவது போலிருக்கிறது மத்திய நீர்வள ஆணையத்தின் மனுத்தாக்கல்.

முல்லைப் பெரியாறு அணை குறித்தான தனி நபர் வழக்குகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்த உச்சநீதிமன்றம், மத்திய நீர்வள ஆணையத்தின் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒரு பொய்யை நூறு முறை சொன்னால் உண்மையாக்கி விடலாம் என்று உலகத்திற்கு சொன்ன கோயபல்சுகளின் வாரிசுகள் கேரளாவில்தான் அதிகம் என்று நினைத்தோம், ஆனால் மத்தியிலும் அவர்கள் ஆயிரக் கணக்கில் ஊடுருவி இருக்கிறார்கள்.

எத்தனை அவதூறுகள் வந்தாலும் அதையெல்லாம் உடைத்து நொறுக்கி கம்பீரமாக முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு நிற்கும் என்பது தான் ஐந்து மாவட்ட விவசாய சங்கம் மத்திய நீர்வள ஆணையத்திற்கு நாங்கள் கொடுக்கும் அறைகூவல். தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு மத்திய நீர்வள ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயலுக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

Tags:    

Similar News