மிகவும் மந்தமாக தொடங்கி.... விறுவிறுப்பாக நடந்த ஓட்டுப்பதிவு...!
தமிழகத்தில் நடந்து முடித்த லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இந்திய ஜனநாயக நடைமுறைக்கு பெரிய வெற்றியை கொடுத்துள்ளது.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கிய போது பலரும் நம்பிக்கையிழந்து இருந்தனர். ஆனால் வழக்கத்தை விட அதிகமாக ஒட்டுகள் பதிவாகின.தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகளிலும் மொத்தம் 68 ஆயிரத்து 321 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. 950 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஏப்., 19ம் தேதி சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. மாநிலம் முழுவதும் சொல்லி வைத்ததை போல் ஓட்டுப்பதிவு மந்தமாக தொடங்கியது. இதனை பார்த்த பலரும் ஏன் ஓட்டுப்பதிவு குறைகிறது என பெரும் குழப்பத்தில் இருந்தனர். நேரம் செல்ல... செல்ல... சீராக உயர்ந்த ஓட்டுப்பதிவு பிற்பகலில் சூடு பிடித்தது.
ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் ஓட்டுப்பதிவு 72.09 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பதிவானதை விட இந்த தேர்தலில் அதிக சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளது. இன்னொரு பெருமைக்குரிய விஷயம் ஓரிரு இடங்களில் மட்டும் சிறு, சிறு குழப்பங்கள் நடந்ததே தவிர, ஒட்டுப்பதிவு நடந்த முறைகளும் பலத்த வெற்றியை பெற்றுள்ளன. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.69 சதவீதம் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
தமிழகத்தின் மிக குறைந்தபட்ச ஒட்டுப்பதிவே 67.35 என்பது மிகவும் பெருமைக்குரிய விஷயம். தமிழத்தின் பெரும்பாலான தொகுதிகளில் சராசரி ஓட்டுப்பதிவு 72ஐ தொட்டு விட்டது. இந்த முடிவுகள் வெளியான போதும், சில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்போட மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
இதனால் ஓட்டுப்பதிவு நிலவரம் 73 சதவீதத்தை தாண்டவும் வாய்ப்புகள் உள்ளது. உண்மையில் இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா பெருமளவில் தடுக்கப்பட்டு விட்ட நிலையில், ஓட்டுப்பதிவு சதவீதம் உயர்ந்திருப்பது ஜனநாயக நடைமுறைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.