சாட்டையை சுழற்றிய ஸ்டாலின்! தேனியில் தி.மு.க., சுறுசுறு
முதல்வர் ஸ்டாலின் சாட்டையை சுழற்றியதால் தேனி தொகுதியில் தி.மு.க.,வினர் மத்தியில் சுறுசுறுப்பு காணப்படுகிறது.
தேனி தொகுதியில் தி.மு.க.,வில் பலம் வாய்ந்த தலைவர்கள் பலர் உள்ளனர். தங்க.தமிழ்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன், கம்பம் செல்வேந்திரன், பெரியகுளம் சரவணக்குமார், போடி லட்சுமணன், பெரியகுளம் மூக்கையா, ஆண்டிபட்டி மகாராஜன் என பலம் வாய்ந்த தலைவர்களின் எண்ணிக்கைக்கு பஞ்சமில்லை.
ஆனால் இவர்கள் அத்தனை பேரும் தனி ஆவர்த்தனம் நடத்துவதில் மிகுந்த திறன் வாய்ந்தவர்கள். ஒருவருக்கு ஒருவர் நட்புடன் பழகினாலும், திரைமறைவில் கோஷ்டி பூசல் உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். இதனால் தான் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால், மற்றவர்களை திருப்திபடுத்த முடியாது எனக்கருதியே முதல்வர் ஸ்டாலின் தேனி மாவட்டத்திற்கும் சேர்த்து தான் ஐ.பெரியசாமி அமைச்சர் என பகிரங்கமாகவே பேசினார்.
இதில் சிலர் சென்னைக்கே சென்று தங்க.தமிழ்செல்வனுக்கு சீட் தரக்கூடாது என்று கூட பேசியுள்ளனர். தேனி மாவட்ட தி.மு.க., தலைவர்களின் பலமும், நிலையும் அறிவாலயத்திற்கு நன்கு தெரியும். இது தெரிந்தும், காங்., கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினால், இழந்து விட நேரியும் என மதிப்பீடு செய்த தி.மு.க., நேரடியாக களம் இறங்கி உள்ளது.
அதனால் பலம் வாய்ந்த வேட்பாளராக தங்க.தமிழ்செல்வனை நிறுத்தி உள்ளது. இவருக்கு அத்தனை பேரும் ஆதரவு தர வேண்டும். மிகவும் சிறப்பாக தேர்தல் பணி செய்ய வேண்டும். ஏதாவது ஒரு பகுதியில் ஓட்டுகள் குறைந்தால், அந்த பகுதி பொறுப்பாளர்கள் தான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது கட்சி நடவடிக்கை பாயும். இது முதல்வர் உத்தரவு என அறிவாலயத்தில் இருந்து தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய தலைவர்கள் அத்தனை பேரிடமும் நேரடியாக போனில் பேசி விட்டனர்.
இதனால் இனியும் தாமதிக்க வேண்டாம் என கருதிய தி.மு.க., தலைவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கி உள்ளனர். எங்களுக்குள் எப்போதுமே கருத்து வேறுபாடுகள் இருந்தது இல்லை. தலைமைக்கு யாரோ தவறாக தகவல் அனுப்பி உள்ளனர். தங்க.தமிழ்செல்வனை வெற்றி பெற வைப்பதன் மூலம் எங்களின் பலத்தை நிரூபிப்போம். எங்களுக்கு கட்சி தான் முக்கியம் என்பதை நிரூபிப்போம் என சூளுரைத்து களம் காண்கின்றனர்.
இப்படி போட்டி இருந்தால் தானே ஜனநாயகம் களை கட்டும்.