தேனி மாவட்டதில் பரவும் இன்புளுயன்சா, கொரோனா, டெங்கு: தவிக்கும் சுகாதாரத்துறை
தேனி மாவட்டத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்று, கொரோனா, டெங்கு என மூன்று காய்ச்சலும் பரவி வருவதால் சுகாதாரத்துறை குழப்பமடைந்துள்ளது;
தேனி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதல் 48 மணி நேரம் பாதிக்கப்பட்டவர்களை படுத்தி எடுத்து விடுகிறது. அதன் பின்னரே குறைகிறது. இன்புளுயன்சா காய்ச்சலா? டெங்குவா? கொரோனாவா? என கண்டறிய காய்ச்சல் தொடங்கியது முதல் நான்கு அல்லது ஐந்து நாட்கள் அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குள் பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் சோர்வாகி விடுகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கிளினிக்கல் பரிசோதனை மூலம் இந்த காய்ச்சல் குறிப்பிட்ட இந்த வகையாகத்தான் இருக்கும் என துல்லியமாக மதிப்பிட்டு மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். ஆனாலும், நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் கணிப்புகளே சிலரிடம் பொய்த்து போய் விடுகின்றன.
இப்போதுள்ள சூழலில் கொரோனா பாதிப்பும் உள்ளது. இன்புளுயன்சா பாதிப்பும் உள்ளது. டெங்கு பாதிப்பும் உள்ளது. இதனால் சுகாதாரத்துறை குழப்பம் அடைந்துள்ளது.
இது குறித்து மருத்துவர்கள் கூறியதாவது: எந்த காய்ச்சலாக இருந்தாலும் ஆன்டிபயாடிக் மருந்துகள் ஓரளவே வேலை செய்யும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும், பாதுகாப்பு நடைமுறைகளுமே இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க ஒரே வாய்ப்பு. எனவே மக்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதோடு, தங்கள் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான உணவுகளை கொடுத்தாலே பாதி சிக்கல் தீர்ந்து விடும். அரசு வழங்கிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்தால் மீதி சிக்கலும் சரியாகி விடும். இந்த பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றாதவர்கள் அவதிக்குள்ளாகி சரியாவதை தவிர்ப்பது இயலாத காரியம் என்றனர்.