Social Workers Request Collector Action மேகமலையில் அனுமதியின்றி கட்டப்படும் பயணியர் விடுதிகள்:மாவட்டநிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Social Workers Request Collector Action தேனி மாவட்டம் மேகமலையில் அனுமதி பெறாமல் கட்டப்படும் பயணியர் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-11-12 08:29 GMT

Social Workers Request Collector Action 

தேனி மாவட்டம் மேகமலையில் அனுமதியின்றி பயணியர் விடுதிகள் அதிக எண்ணிக்கையில் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு ஏக்கர் நிலம் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு ரியல் எஸ்டேட் தொழிலும் கொடிகட்டிப்பறக்கிறது. குரங்கனி தீ விபத்திற்கு பின்னரும் வனத்திற்குள் பயணிகள் டிரக்கிங் செல்வது அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் ஒரு பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி இருந்தாலும், அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையினை எடுக்கவில்லை.

தேனி மாவட்டத்தில், மேகமலை வனவிலங்குகள் சரணாலயம் 786 சதுர கி.மீ., வனப்பரப்பில் அமைந்துள்ளது. இயற்கை வளம் கொழிக்கும் இந்த வனம் பல்வேறு வகைகளில் அழிக்கப்பட்டு வருவதை மாநில வனத்துறைஅதிகாரிகள் இதற்கான நடவடிக்கையினை வனத்துறை இதுவரை மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது புதிய அபாயமும் இங்கு உருவாகி உள்ளது. இந்த வனப்பகுதியில் ஹைவேஸ் பேரூராட்சி அமைந்துள்ளது. இந்த பேரூராட்சிக்குள் ஹைவேசில்  மேகமலை, மணலாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, மேல்மணலாறு, வெண்ணியாறு ஆகிய ஏழு கிராமங்கள் உள்ளன. 4800 பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் இங்குள்ள எஸ்டேட்களில் வசிக்கின்றனர். எஸ்டேட் நிர்வாகங்களே இவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சின்னமனுார் நகராட்சியில் இருந்துஹைவேசில் பேரூராட்சி வரை 54 கி.மீ., துாரம் 100 கோடி ரூபாய் செலவில் ரோடு அமைக்கப்பட்டது. இதன் பின்னர் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

Social Workers Request Collector Action 


இயற்கை எழில் சூழ்ந்த  நிலையில் காணப்படும்  மேகமலை (கோப்பு படம்)

இதனால் இந்த ஏழு கிராமங்கள் மட்டுமின்றி கடானா, மணலாறு, அத்துவான் போன்ற அடர்ந்த வனப்பகுதிகளிலும் (மிகவும் அடர்ந்த வனப்பகுதிகள்) புதிதாக தங்கும் விடுதிகள் ஏராளமாக கட்டப்பட்டு வருகின்றன. பலர் விடுதிகளை கட்டி முடித்துள்ளனர். பலர் விடுதிகளை கட்டி வருகின்றனர். வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனப்பகுதிகளுக்குள் பயணியர் விடுதிகள் கட்ட பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதி வாங்க வேண்டும். இந்த விடுதிகளுக்கு கட்டட அனுமதி, கட்டுமான வலுத்திறன் அனுமதி, சுகாதாரத்துறை அனுமதி, உணவுப்பாதுகாப்புத்துறை அனுமதி உட்பட பல்வேறு அரசுத்துறைகளின் அனுமதிகள் தேவை. ஆனால் இந்த பயணியர் விடுதிகள் எந்தவித அனுமதியும் இல்லாமல் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தவிர இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அடர்ந்த வனத்திற்குள் டிரக்கிங் அழைத்துச் செல்லப்படுகின்றனர். கடந்த 2018 ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி தேனி மாவட்டம், போடி குரங்கனியில் டிரக்கிங் சென்ற பயணிகள் 22 பேர் வனத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். போலீசார், தீயணைப்புத்துறை மட்டுமின்றி ராணுவமும் வந்து மீட்புபணிகளில் ஈடுபட வேண்டி இருந்தது.

ஆனால் மேகமலையில் இப்படி ஒரு தீ விபத்து ஏற்பட்டு பயணிகள் சிக்கினால் போலீசார், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு செல்லவே 5 மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடும். தவிர இங்கு மீட்பு பணிகள் மேற்கொள்வது மிகவும் சிக்கலாகி விடும். இங்கு தங்கும் பயணிகளுக்கு இரவில் ஏதாவது உடல்நலக்குறைபாடு ஏற்பட்டால் முதலுதவி கொடுக்க கூட இங்கு வசதிகள் இல்லை. இத்தனை அபாயங்களையும் மீறி ‛பணம்’ என்ற ஒரே குறிக்கோளுடன் சிலர் பயணியர் விடுதிகளை கட்டி பயணிகளை தங்க வைத்து, டிரக்கிங் அழைத்துச் செல்கின்றனர். தவிர இங்கு ரியல் எஸ்டேட் தொழிலும் கொடி கட்டிப்பறக்கிறது. ஒரு சென்ட் நிலம் ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஒரு ஏக்கர் ஒரு கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வனத்தை ஒட்டி உள்ள வனநிலங்களும் கபளீகரம் செய்யப்படுகின்றன. வருவாய்த்துறையும் இதற்கு அனுமதி வழங்கி வருகிறது என வன ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். ஏற்கனவே அழிந்து வரும் மேகமலை தற்போது உருவாகி வரும் சூழலால் பெரும் பேரழிவில் சிக்க போகிறது எனவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

இது குறித்துஹைவேஸ் அதிகாரிகள் கூறியதாவது: பேரூராட்சிக்குஹைவேஸ் மலையில் இடம் இல்லை. ஊரக வளர்ச்சி முகமைக்கு சொந்தமான இடங்களில் ஏராளமான கட்டடங்கள் புதிதாக உருவாகி வருகின்றன என்பது உண்மை தான். வனத்தை ஒட்டிய ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் தான் புதிய பயணியர் விடுதிகள் கட்டப்படுகின்றன. இதற்கு நாங்கள் எதுவும் செய்ய முடியாது. மயிலாடும்பாறை ஒன்றிய அதிகாரிகள் தான் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இது குறித்து மேகமலை வன உயிரின சரணாலய  அதிகாரிகள் கூறியதாவது: இந்த பிரச்னை எங்கள் கவனத்திற்கும் வந்தது. வனப்பகுதிகளை ஒட்டி தான் புதிய கட்டடங்கள் உருவாகின்றன. இவர்கள் யாரிடம் அனுமதி வாங்குகின்றனர் என்பது தெரியவில்லை. வனத்திற்குள் கட்டினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். இவர்கள் வனத்தை ஒட்டிய இடங்களில் கட்டுகின்றனர். பலர் எந்த அனுமதியும் இன்றி கட்டுவதாக எங்களுக்கும் புகார் வந்துள்ளது. தவிர சுற்றுலா பயணிகளை உயரமான மலைத்தொடர்கள் அமைந்துள்ள மகாராஜாமெட்டு, இரவங்கலாறு பகுதிகளில் உள்ள வியூ பாயிண்ட்டிற்கு அனுமதியின்றி அழைத்துச் செல்கின்றனர். இது மிகவும் அபாயகரமான விஷயம். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்.

உத்தமபாளையம் வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது: மேகமலை வனப்பகுதியில் அனுமதியின்றி கட்டடம் கட்டினால் தடுக்க வனத்துறை தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் கையில் எதுவும் இல்லை. இருப்பினும் நாங்கள் தடுக்க வேண்டிய விஷயங்கள் எதுவும் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறேன். நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியதாக இருந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு கூறினார்.

அரசுத்துறை அதிகாரிகள் ‛எனக்கு பொறுப்பில்லை, அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஒருவருக்கொருவர் கை காட்டி வருவதால் இந்த பிரச்னைக்கு மாவட்ட கலெக்டர் தான் தீர்வு காண வேண்டும். எனவே கலெக்டர் தனி விசாரணைக்குழு அமைத்து விதிமீறல் கட்டங்கள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News