25 ஆண்டுக்கும் மேலாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சமூகஆர்வலர்

சமூக ஆர்வலர் பாண்டியராஜன், 25ஆண்டுக்கும் மேலாக ஆண்டுதோறும் 400 மாணவர்களுக்கு இலவசமாக பள்ளி சீருடையை தன் சொந்த செலவில் வழங்கி வருகிறார்.;

Update: 2022-05-20 08:25 GMT

சமூக ஆர்வலர் பாண்டியராஜன்.

தேனி மாவட்டம், கூடலுார் அழகர்சாமி கோயில், ராஜாத்தி அம்மன் கோயில்களுக்கு அருகில் உள்ள வீட்டில் (நாட்டாமை வீடு என அழைப்பார்கள்) வசிப்பவர் பாண்டியராஜன். மிகுந்த பாரம்பரியம் மிக்க விவசாய குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சர்வேயராக இருந்தவர். இவர் ஆண்டு தோறும் பள்ளி மாணவ, மாணவிகள் 400 பேருக்கு இலவச சீருடை, நோட்டு, புத்தகங்கள் வழங்கி வருகிறார். இதன் மதிப்பு முன்பு கடந்த ஆண்டுகளில் ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் வரை இருந்தது. நடப்பு ஆண்டு ஜவுளி விலை, நோட்டு புத்தகங்களின் விலை உயர்வு காரணமாக 8 லட்சம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு பற்றி கவலைப்படாமல் இந்த ஆண்டும் தான் யார், யாருக்கு இலவச சீருடை, நோட்டு, புத்தகங்கள், படிக்க தேவையான பொருட்கள் வழங்க வேண்டும் என்ற பட்டியல் தயாரித்து வருகிறார். (தேவைப்படும் மாணவ, மாணவிகள் இவரை 95000 66020 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளலாம்).

இவர் கடந்த 25 ஆண்டுகளாக ஆண்டு தோறும் வழங்கி வருகிறார். இதுவரை இந்த விஷயம் பயன்பெற்றவர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு கூட தெரியாது. நாட்டாமை வீடு என இவரது வீட்டை அந்த தெரு மக்கள் பேச்சு மொழியில் அழைத்து வருகின்றனர். இந்த ஆண்டு அவராக சிலரிடம் சொல்லி, ஏழை மாணவ, மாணவிகள் இருந்தால் பரிந்துரை செய்யுங்கள் என கேட்டதால் தான் இந்த விஷயம் வெளியே வந்துள்ளது. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக இவர் இப்படி வழங்கிய தொகையினை கணக்கிட்டால் ஒண்ணரை கோடி ரூபாயினை தாண்டும் என்கின்றனர் இவரது குடும்பத்தினர். இவர் இதற்காக யாரிடமும் ஒரு ரூபாய் கூட நன்கொடை வாங்கியதில்லை. முழுவதும் தனது சொந்த வருமானத்தில் இருந்தே செய்கிறார். சமூகத்தில் நலிந்தவர்களுக்கு இதர வேறு பல உதவிகளையும் தன்னால் முடிந்த அளவு செய்து வருகிறார். நேரடியாக தொடர்பு கொள்பவர்களுக்கே உதவிகள் கிடைக்கும். பரிந்துரை என்ற பெயரில் மூன்றாம் நபரை உள்ளே இழுத்து, விளம்பரம் தேட விரும்பவில்லை என 'பளீச்' என கூறுகிறார்.

Tags:    

Similar News