குடிமகன்களுக்கு ஹெல்த் 'சைடிஸ்': லாபத்தை அள்ளிக் குவிக்கும் சிறு வியாபாரிகள்
குடிமகன்கள் பயன்படுத்தும் புதிய 'சைடிஸ்' காரணமாக தெருவோர சிறு வியாபாரிகள் வருவாயினை குவித்து வருகின்றனர்.
மதுஅருந்துவது தவறு என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அரசே அதனை விற்கும் அளவுக்கு நிலைமை தமிழகத்தில் உருவாகி உள்ளது. இனிமேல் மதுவிலக்கு பற்றிய பேச்செல்லாம் தமிழகத்தில் எடுபடாது. எனவே அடுத்த விஷயத்திற்கு வருவோம்.
இப்போது குடிமகன்களின் எண்ணிக்கை மட்டும் தமிழகத்தில் நாளுக்கு நாள் பெருகி வரவில்லை. குடிமகன்களிடம் விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது. (இந்த செய்தி எல்லா குடிமகன்களுக்கும் பொருந்தாது. ஆனால் பெரும்பாலான குடிமகன்கள் மாறி வருகின்றனர்). அதாவது மது அருந்தும் போது, நான் வெஜ் பயன்படுத்துவதை குறைத்து விட்டனர். பலர் நான் வெஜ் தொடுவதில்லை. காரணம் மது அருந்தி விட்டு எண்ணெய்யில் பொறித்த, அல்லது மசாலா அதிகம் சேர்த்த நான் வெஜ் பயன்படுத்துவதால் கடும் உடல்நலக்குறைபாடு ஏற்படுகிறது என திடமாக நம்புகின்றனர்.
தவிர மதுபார்களில் நிச்சயம் தரமான நான்வெஜ் இருக்காது. குடிமகன்கள் தானே, போதையில் எதை கொடுத்தாலும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என எதையாவது கொடுத்து விடுவார்கள். இதனால் நம் உடல் நலம் தான் பாதிக்கப்படும் என கருதுகின்றனர். சரி அப்ப மது அருந்தும் போதும் அடுத்து சைடிஸ்க்கு என்ன செய்யலாம். பார்களில் கொடுக்கும் சைடிஸ்களும் தரம் குறைந்ததாகவே இருக்கும். பல பார்களில் தரமற்ற குடிநீரை (சில இடங்களில் பாத்ரூம் குழாய்களில் பிடித்த குடிநீரை) பாட்டில்களில் அடைத்து கொடுத்து விடுகின்றனர்.
எனவே சரக்கு வாங்கி விட்டு ஒதுக்குப்புறமாக ஜில் என்ற காற்று வீசும் வெட்ட வெளியில் மங்கிய வெளிச்சத்தில் மது அருந்தலாம் என முடிவு செய்து விட்டனர். இதனால் தமிழகத்தில் நீங்கள் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் சென்று பார்க்கலாம். அங்குள்ள கிரவுண்ட்கள், பொது இடங்களில் மதுபாட்டில்கள் குவிந்து கிடக்கும். சில இடங்களில் உடைத்து போட்டு விடுவார்கள். (இந்த பாட்டில்களை பொறுக்கவே ஒவ்வொரு ஊரிலும் பலர் உள்ளனர். அவர்கள் காலை 5 மணிக்கெல்லாம் சென்று பாட்டில்களை பொறுக்கி எடுத்து விடுகின்றனர். இதனால் உடைந்த கண்ணாடி துண்டுகள் மட்டும் ஆங்காங்கே சிதறி கிடக்கும்).
இப்படி பொதுவெளியிலும், வெட்ட வெளியிலும் மது அருந்துபவர்கள் பயன்படுத்தும் சைடிஸ் என்ன தெரியுமா. இவர்கள் தங்களது சைடிஸ்களை தெருவோர வியாபாரிகளிடம் வாங்குகின்றனர். அதாவது தெருவோர வியாபாரிகள் கப்பைக்கிழங்கு, சுண்டல், தட்டாம்பயறு, பாசிப்பயறு, நிலக்கடலை, கானம் உள்ளிட்ட சில பயறு வகைகளை வேக வைத்து விற்கின்றனர். அத்தனை பயறு வகைகளையும் ஒரு காக்டெயில் போல் கலந்து, அதனுடன் நறுக்கிய வெங்காயம், புதினா, மல்லி, கேரட் துருவல், நறுக்கிய மாங்காய் கலந்து இவற்றுடன் மிளகாய் பொடி போட்டு ஒரு கலக்கு கலக்கி ஒரு பார்சலாக கட்டித்தருகின்றனர். இதேபோல் அரிசி பொறியையும், இந்த நறுக்கி வைத்த அதே பொருட்களுடன் கலந்து காரமாக தருகின்றனர். அத்தனையும் சேர்ந்து கலக்கி தர ஒரு பார்சல் 20 ரூபாய், 30 ரூபாய் என அளவிற்கு ஏற்ப விற்கின்றனர். மது அருந்தும் போது குடிமகன்களில் பலர் வடைகளை கூட தவிர்க்கின்றனர். காரணம் வடைகளை எண்ணெய்யில் பொறிக்கின்றனராம்.
தெருவோர சிறு வியாபாரிகள் இப்படி கலக்கி தரும் அத்தனையும் நீராவி அல்லது தண்ணீரில் வேக வைத்த பொருட்கள் தான். அதனால் மது மட்டுமே உடலை கெடுக்கும். சைடிஸ்களால் பிரச்னை இருக்காது என்பதை குடிமகன்கள் உறுதிப்படுத்தி விடுகின்றனர். ஒரு குடிமகன் குறைந்தபட்சம் 30 ரூபாய்க்கு சைடிஸ் வாங்குகின்றார். ஒரு தெருவோர வியாபாரியிடம் குறைந்தது தினமும் சில நுாறு பேர் வாங்குகின்றனர். அப்படியானால் வியாபாரத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். தெருவோர வியாபாரிகள் இதற்கேற்ற இடங்களை தேர்வு செய்தே நிற்கின்றனர். வியாபாரத்தை பெருக்குகின்றனர்.
இந்த குடிமகன்களின் இன்னொரு பழக்கமும் ஆச்சர்யமாக உள்ளது. இரவில் மது அருந்து விட்டு, சிறுதானிய அல்லது நவதானிய சைடிஸ்களை சாலையோர வியாபாரிகளிடம் வாங்கி சாப்பிடுகின்றனர். அதேபோல் புரோட்டோ போன்ற கடின உணவுகளை கை விட்டு, இட்லி்யோ, தோசையோ சாப்பிட்டு விட்டு துாங்கி விடுகின்றனர்.
காலை எழுந்ததும் இவர்களின் உணவு மேலும் கண்களை விரிய வைக்கும். ஆமாம். மீண்டும் சாலையோர வியாபாரிகளை தேடி வருகின்றனர். காலை 8 மணிக்கெல்லாம் சாலையோர வியாபாரிகள் சூடாக கம்மங்கூல், கேப்பைக்கூழ் தயாராக வைத்திருப்பார்கள். இவற்றுடன் மோர், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் கலந்த ஒரு செம்பு (இரண்டு டம்ளர்) 30 ரூபாய் அல்லது 40 ரூபாய்க்கு வாங்கி குடிக்கின்றனர். மதியம் வழக்கமான உணவு. இரவில் மீண்டும் நவதானிய சைடிஸ். இப்படித்தான் தங்கள் உடலை குடிமகன்கள் பராமரிக்கின்றனர். ஆனால் நார்மலாக இருப்பவர்கள் மது அருந்தா விட்டாலும், புரோட்டோ, சவர்மா, சிக்கன், மட்டன், பிரியாணி, கட்டுச்சோறு, பீஷா, பர்கர் என சாப்பிட்டு, விரைவில் இறைவனிடம் போய் சேர்ந்து விடுகின்றனர். குடிமகன்களின் இந்த பழக்கத்தால் அவர்கள் நீண்டகாலம் வாழ்வதோடு, பல பல சாலையோர வியாபாரிகளின் வாழ்விலும் ஒளியேற்றுகின்றனர். ஆக உணவுப்பழக்கத்தை பொறுத்தவரை குடிமகன்கள் தானே என நாம் ஏளனம் செய்பவர்கள் முறையான உணவுப்பழக்கத்தை பின்பற்றுகின்றனர். குடிக்காதவர்கள் என நாம் நினைக்கும் நல்லவர்கள், குடியை தவிர்த்து விட்டு இதர வகைகளில் தவறான உணவுப்பழக்கம் காரணமாக தன் உடலை கெடுத்துக் கொள்கின்றனர்.