தேவிகுளம்,பீர்மேட்டை தமிழகத்துடன் இணைக்க கோரி கையெழுத்து இயக்கம் துவக்கம்

தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க கோரி கையெழுத்து இயக்கம் இன்று தொடங்குகிறது.

Update: 2022-07-22 05:15 GMT
சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் டிபியு ஹேஸ்டேக்.

முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறையினை கொண்டு வரக்கூடாது என தமிழக விவசாயிகள் போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், கேரள நீர்வளத்துறை அமைச்சர் முல்லைப்பெரியாறில் 136 அடிக்கு மேல் தண்ணீர் தேக்க விடமாட்டோம். தற்போது உள்ள பழைய அணையில் இருந்து 1300 அடி துாரத்தில் புதிய அணை கட்ட அத்தனை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என அறிவித்துள்ளார். இதனை அறிந்த தமிழக விவசாயிகள் கொந்தளிப்பின் உச்சத்திற்கே சென்று விட்டனர்.

இன்று மாலை லோயர்கேம்ப்பில் முல்லைப்பெரியாறு அணைகட்டிய கர்னல் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் இருந்து தேவிகுளம், பீர்மேடு, உடும்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்கும் ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தை தொடங்குகின்றனர். அதேபோல் இன்று மாலை 4 மணிக்கு சிவகங்கை மாவட்டத்தில் ஆதீனமிளகி அய்யனார் கோயிலில் இந்த போராட்டங்களில் பங்கேற்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது.

தவிர பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், #AnnexDPUwithTN# என்ற ஹேஸ்டேக் (D-தேவிகுளம், P-பீர்மேடு, U- உடும்பஞ்சோலை இந்த மூன்று தாலுகாக்களையும் தமிழகத்துடன் இணைத்திடு ) என்ற ஹேஸ்டேக், சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. விவசாய சங்கங்களின் கோரிக்கையினை ஏற்று பொதுமக்களும் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இந்தப்பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, கேரள அரசிடம் பேசி, கேரளாவின் அத்துமீறல்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால் பிரச்னை மேலும் சிக்கலாகி விடும் என பொதுமக்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News