தேனியில் தொடர் கொலை சம்பவங்கள்: தலைதுாக்குகிறதா ரவுடியிசம்
தேனி மாவட்டத்தில் 150 க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டும் ரவுடியிசம் குறையவில்லை.;
பைல் படம்.
தேனி கோடாங்கிபட்டியை சேர்ந்தவர் பாண்டியன்( 61.) மரக்கடை நடத்தி வந்தார். இவரது வீட்டருகே குடிமகன்கள் குடித்து விட்டு அலம்பலில் ஈடுபட்டனர். இதனை கண்டித்ததால், குடிமகன்கள் பாண்டியனை வெட்டி கொலை செய்தனர்.
அடுத்து போடியில் பட்டப்பகலில் ஒரு லாட்ஜ் உரிமையாளரை ஜீப்பில் வந்த கும்பல் வெட்டி சாய்த்துள்ளது. ஒரு நாள் முன்னதாக தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதியின் வீட்டிற்குள்ளேயே புகுந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. அதேபோல் கடந்த சில நாட்களுக்குள் ஆசிட் வீச்சு, கொலை, கொள்ளை என பல சம்பவங்கள் நடந்துள்ளன.
தேனி எஸ்.பி.-யும் கலெக்டரும் பொறுப்பேற்று ஒண்ணரை ஆண்டுகளுக்குள் 150க்கும் மேற்பட்டோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் மாவட்டத்தில் குற்ற வழக்குகளும், குற்றச்சம்பவங்களும் குறைய வில்லை. பெரும்பாலும் அரசியல் கட்சிகளி்ன் பின்புலத்தில் குற்றச் சம்பவங்கள் நடப்பதாலும் (கஞ்சா, பாட்டில், புகையிலை விற்பவர்களில் மிகப்பெரும்பாலானோர் அரசியல் பின்னணி உள்ளவர்கள்) போலீசார் பல நேரங்களில் மவுனம் சாதிப்ப தையும் கவனிக்க முடிகிறது. பொதுவாகவே தி.மு.க.வை விட அதிமுகவே சட்டம் ஒழுங்கினை நிர்வகிப்பதில் திறன் வாய்ந்தது என்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் உள்ளது. இந்த கருத்தை உடைத்து, குற்றவாளிகளை கைது செய்து, (தி.மு.க. ஒன்றிய செயலாளரே வெட்டப்பட்டுள்ளார். குற்றவாளிகள் கைதாகவில்லை) சட்டம் ஒழுங்கினை வலுவுடன் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.