ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற 10 கி மீ தொலைவு நடந்து செல்லும் மக்கள்
ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற பொதுமக்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் 10 கி.மீ. தொலைவுக்கு நடந்து செல்கின்றனர்..;
தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், வடபுதுப்பட்டியில் இருந்து 2 கி.மீ., தொலைவில் மலைக்கரட்டில் அமைந்துள்ளது. இங்கு வடபுதுப்பட்டி, கெண்டிக்காரன்புதுார், சக்கரைப்பட்டி, சாவடிபட்டி உள்ளிட்ட பல கிராம மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர்.வடபுதுப்பட்டியில் இருந்து இக்கிராமங்கள் 3 முதல் 5 கி.மீ., தொலைவில் உள்ளன. இக்கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லை.
இதனால் வடபுதுப்பட்டி வரை நடந்து வந்து, அங்கிருந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வர வேண்டும். ஆக வர ஐந்து கி.மீ., திரும்ப செல்ல ஐந்து கி.மீ., உட்பட மொத்தம் 10 கி.மீ., துாரம் நடக்க வேண்டும். சில கிராம மக்கள் கூடுதலாக 6 கி.மீ., வரை நடக்க வேண்டும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இங்கு கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை நடக்கிறது. கர்ப்பிணிகளின் நிலையும் இது தான். பொதுமக்கள், முதியவர்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது.
சக்கரைப்பட்டியை சேர்ந்த சூரியம்மாள் கூறியதாவது: சிகிச்சைக்கு வழியில்லாமல் ஆரம்ப சுகாதார நிலையம் வரும் நாங்கள் ஆட்டோ பிடித்தா வர முடியும். ஆட்டோவில் வந்து செல்ல 120 ரூபாய் கேட்பார்கள். அவ்வளவு பணம் எங்களால் தர முடியாது. எனவே காலை, மாலை குறிப்பிட்ட நேரத்திற்காவது ஆரம்ப சுகாதார நிலையம் வந்து செல்ல வசதியாக இக்கிராமங்களை இணைத்து அரசு டவுன் பஸ் வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினார்.