எச்சரிக்கைகளை மீறி ஆற்றில் குளிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள்
போலீஸ், தீயணைப்புத்துறை பலமுறை அறிவுறுத்தியும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் குளித்து வருகின்றனர்
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உள்ளதால் குளிக்க வேண்டாம் என போலீஸ், தீயணைப்புத்துறை பலமுறை அறிவுறுத்தியும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இதனை கண்டுகொள்ளாமல் ஆபத்தான முறையில் குளித்து வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் சுருளியாறு, முல்லை பெரியாறு, வைகை ஆறு, கொட்டகுடி ஆறு, வராகநதிகளில் பெரும் அளவி்ல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் குளிக்க வேண்டாம், துணிகளை துவைக்க வேண்டாம், வாகனங்களை கழுவ வேண்டாம், செல்பி எடுக்க வேண்டாம் என மாவட்ட போலீஸ் நிர்வாகமும், தீயணைப்புத்துறையும் பலமுறை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பள்ளி கல்லுாரி மாணவர்கள் பலர் கண்டுகொள்ளவில்லை.
தேனியில் சடையாள்கோயில், பழனிசெட்டிபட்டி வாட்டர் டேங்க், வீரபாண்டி முல்லையாறு, குன்னுார் வைகை ஆறு ஆகிய இடங்களில் ஆற்றுக்குள் இறங்கி ஆபத்தான முறையில் நீரில் குளிக்கின்றனர். சிலர் மது அருந்தி விட்டும், கஞ்சா புகைத்து விட்டும் நிதானம் இழந்த நிலையில் நீரில் குளிக்கின்றனர். இது மிகவும் ஆபத்தானது என்பது தெரிந்தும் இவர்கள் இப்படி குளிப்பதால் என்ன செய்வது என்பது தெரியாமல் போலீஸ், தீயணைப்புத்துறையினர் தவித்து வருகின்றன. இவர்களுக்கு மது, கஞ்சா கள்ள மார்க்கெட்டில் கிடைக்காமல் தடுத்து விட்டாலே, எழுபது சதவீதம் பிரச்னைகள் சரியாகி விடும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.