உள்ளாட்சிகளில் தூய்மைப்பணியினை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு
உள்ளாட்சிகளில் துாய்மைப்பணியினை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது என ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு ஜெனரல் எம்ப்ளாய்ஸ் யூனியன் தேனி மாவட்டக்குழுக் கூட்டம், தேனி சிவாஜி நகரில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சரவணக்குமார் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் இராசதுரை வேலை அறிக்கையை முன்வைத்துப் பேசினார். தமிழ்நாடு உள்ளாட்சித்துறை சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர் செல்வராஜ் வாழ்த்தி பேசினார். மாநிலத்தலைவர் சி.கலியமூர்த்தி, சங்கத்தின் நோக்கம், எதிர்காலக் கடமைகள் குறித்து விளக்கி பேசினார்.
தேனி நகரத்தலைவர் மாடசாமி, நகரச் செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் இரவி, மணிமுத்து, சாலையோர வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் முருகானந்தம், பால்பாண்டி, கவிதா,இராஜம்மாள், தேனி நகர வீட்டு வேலை பணியாளர் சங்கத் தலைவர் பூங்காவனம், செங்கல் சூளை பணியாளர் சங்க நிர்வாகிகள் சுருளியம்மாள், மாரியம்மாள், முத்துலட்சுமி, முத்துமணி, மரம் ஏறும் தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த கோபால், இருசக்கர வாகன பழுதுபார்த்தல் சங்கம் அழகேசன், உட்பட பலர் விவாதத்தில் கலந்து கொண்டனர். சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆனந்தன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிலாளர் நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பினை திரும்பப் பெற வேண்டும். தொழிலாளர் நலவாரியங்களை முடக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மின்சாரத் திருத்த சட்ட மசோதாவைக் கைவிடவேண்டும். நகரங்கள் மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் தூய்மைப் பணியாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். தூய்மைப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.