சீசனில் மட்டும் கிடைக்கும் சணம்பு கீரை..!
குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்கும் வித்தியாசமான சுவை, அதிக சத்து கொண்ட சணம்பு கீரை விற்பனை தேனி மார்க்கெட்டில் களை கட்டி வருகிறது.
தேனி மார்க்கெட்டில் கூடலுார், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் பகுதியில் தென்னை, வாழை தோட்டங்களுக்கு இடையேயும், வயல்களிலும் சணம்பு பயிரிடுவார்கள். இதில் விளையும் மொட்டுக்களை பறித்து கீரையாக விற்பனை செய்வார்கள். எனவே குறிப்பிட்ட சீசனில் மட்டுமே இந்த கீரை கிடைக்கும்.
தற்போது முதல்போக நெல் சாகுபடி இல்லாதததால் வயல்களில் சணம்பு வளர்ப்பு அதிகமாக உள்ளது. இதில் மொட்டுகளை பறித்து கீரையாக விற்கும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டுள்ளனர். மொட்டுகளை பறித்த பின்னர், மீதம் செடிகளை உழவு செய்து விடுவார்கள். இந்த கீரை விற்பனை செய்பவர்கள் தேனி மார்க்கெட்டை குறி வைக்கின்றனர்.
இங்குள்ள மக்கள் சணம்பு கீரையினை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனை சமைப்பதும் எளிது, சுவையும் நன்றாக இருக்கும். இதையெல்லாம் விட முக்கிய காரணம் சணம்பு வளர்ப்பிற்கு உரமிட மாட்டார்கள். மருந்து தெளிக்க மாட்டார்கள். எனவே தேனி மக்கள் விரும்பி வாங்குகின்றனர். ஒரு படி 40 ரூபாய்க்கு இந்த கீரைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
கீரை விற்கும் முருகேஸ்வரி கூறுகையில், ‛சணம்பு கீரை எப்போதாவது ஒருமுறை வரும். அதிகபட்சம் 15 நாளில் சீசன் முடிந்து விடும். அடுத்து சணம்பு விதைத்தால் தான் உண்டு. பெரும்பாலும் வறட்சி காலத்தின் நிலத்தில் வளத்தை பெருக்க சணம்பு விதைப்பார்கள். எனவே வறட்சி காலத்தில் இந்த கீரை அதிகம் கிடைக்கும். இவ்வாறு கூறினார்.