கம்பத்தில் வேகாத இறைச்சி விற்பனை: உணவுப் பாதுகாப்புத்துறையிடம் புகார்

கம்பத்தில் தனியார் ஓட்டலில் வேகாத இறைச்சி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் குறித்து உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-05 00:09 GMT

கம்பம் தனியார் ஓட்டலில் விற்கப்பட்ட மசால் தடவிய வேகாத சிக்கன்.

தேனி மாவட்டம், கம்பத்தில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் மூன்று செய்தியாளர்கள் உட்பட ஐந்து பேர் 1210 ரூபாய்க்கு பிரியாணி, சிக்கன் ஆர்டர் செய்துள்ளனர். பிரியாணி நல்ல முறையில் கொடுத்த உணவகத்தினர் சரியாக வேக வைக்கப்படாத சிக்கனை கொடுத்துள்ளனர்.

வீட்டில் போய் சாப்பிட பிரித்து பார்த்த பின்னரே சிக்கன் வேகாமல் மசாலாவுடன் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலரிடம் புகார் செய்தனர். புகாரை பெற்றுக் கொண்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர் சம்மந்தப்பட்ட உணவகம் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த பிரச்னை கம்பத்தில் உள்ள அந்த ஒரு உணவகத்தில்  மட்டுமல்ல. தேனி மாவட்டத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஓருசில உணவகங்களை தவிர மற்ற உணவகங்களில் எல்லாம் இந்த பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. உணவகத்தில் சிக்கன், மட்டன் சாப்பிட்ட பலர் உடல் உபாதையால் அவதிப்பட்டுள்ளனர்.

இது பற்றி புகார் எழுப்பியும் எந்த பலனும் இல்லை. தற்போது செய்தியாளர்கள் மூன்று பேர் இந்த பிரச்னையில் சம்மந்தப்பட்டுள்ளதால் உணவுப்பாதுகாப்பு அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியரிடம்  முறையிடபோவதாகவும் செய்தியாளர்களும் மற்றவர்களும் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக தேனி மாவட்டம் முழுவதும் இந்த பிரச்னை நிலவுவதால், உணவுப்பாதுகாப்புத்துறையில் அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளது என குறைபாட்டை காரணம் காட்டி நடவடிக்கை எடுப்பதை தவிர்க்கின்றனர். ஆனால் உள்ளாட்சிகளின் சுகாதாரத்துறைகள் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் சஜீவனா நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News