பறக்கும் பக்தர்கள்... தவிக்கும் வியாபாரிகள்...
தேனி மாவட்டத்தில் அனைத்து ஊர்களிலும் உள்ள பைபாஸ் சாலையில் சபரிமலை பக்தர்கள் பறந்து செல்வதால் வியாபாரிகள் பரிதவிப்பு
தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம், கூடலுார் என அனைத்து ஊர்களிலும் நான்கு வழிச்சாலை பைபாஸ் அமைக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த பைபாஸ் ரோட்டின் வழியாக வேகமாக கடந்து சென்ற விடுகின்றனர். 90 சதவீத பக்தர்கள் எந்த ஊருக்குள்ளும் வருவதில்லை. தேனிக்குள் மட்டும் 10 சதவீதம் பேர், வந்து காலை, மதியம், இரவு உணவினை முடித்து விட்டு செல்கின்றனர். மற்ற ஊர்களுக்குள் செல்வதே இல்லை.
தவிர பைபாஸ் ரோட்டின் ஓரங்களில் தற்போது அதிகளவு ஓட்டல்கள் வந்து விட்டன. இதனால் போகும் வழியிலேயே சாப்பாட்டினை முடித்து விடுகின்றனர். இதனால் ஊருக்குள் பக்தர்களை நம்பி அசைவத்தில் இருந்து சைவத்திற்கு மாறிய பல கடைகளில் வியாபாரம் டல்லடிக்கிறது. சபரிமலை சீசனில் தேனிக் குள்ளேயே ஓரிரு ஓட்டல்களை தவிர மற்ற ஓட்டல்கள் அனைத்தும் வெறிச் சோடிக்கிடக்கின்றன. பக்தர்கள் பைபாஸ் ரோட்டில் சென்று விடுவதே, வியாபாரம் டல்லடிக்க காரணம் என ஓட்டல் உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.