குமுளியிலிருந்து தமிழகத்திற்கு பஸ் வசதியின்றி பரிதவிக்கும் சபரிமலை பக்தர்கள்
குமுளியில் இருந்து தமிழகத்தின் பிற நகரங்களுக்கு செல்ல இரவு நேர பஸ்வசதி இல்லாமல் ஐயப்ப பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.
குமுளி தமிழக பஸ்ஸ்டாண்டில் இருந்து தமிழகம் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்ல இரவு நேர பஸ் வசதி இல்லாமல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் பரிதவித்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் சீசன் மும்முரமான கட்டத்தை எட்டி உள்ளது. தினமும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தேனி மாவட்டத்தை கடந்து குமுளி வழியாக சபரிமலை செல்கின்றனர். தேனி, கம்பத்தில் இருந்து குமுளி செல்ல எந்த நேரமும் பஸ் வசதி உள்ளது. ஆனால் திரும்ப வரும் போது குமுளி தமிழக பஸ்ஸ்டாண்டில் இருந்து தமிழகம் திரும்ப இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 2.30 மணி வரை பஸ் இல்லை.
அதேபோல் குமுளி தமிழக பஸ்ஸ்டாண்ட் அடர்ந்த வனத்திற்குள் மலை உச்சியில் அமைந்துள்ளது. அங்கு நிழற்குடை வசதி, ஓட்டல், டீக்கடை, பாத்ரூம், குடிநீர், மின்விளக்கு என எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. தற்போது கடும் குளிர், கொசுத்தொல்லை அதிகம் நிலவுவதால், பக்தர்கள் இரவு 3.30 மணி நேரம் காத்திருந்தே பஸ் ஏற வேண்டி உள்ளது.
சபரிமலை சீசன் முடியும் வரையாவது இரவு எந்த நேரமும் தமிழகத்தின் பிற நகரங்களுக்கு செல்ல குமுளியில் இருந்து பஸ் செல்ல வசதி வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.