சீனாவிடம் சிக்கி தவிக்கும் ரஷ்யா

சீனா ஒரு மாதிரியான நாடு, எல்லா பிரச்னைக ளையும் தனது சுய நலத்தை முன்னிறுத்தியே பார்க்கக் கூடிய நாடு;

Update: 2023-03-28 07:15 GMT

 ரஷ்ய -சீனா அதிபர்கள் (பைல் படம்)

சீனா ஒரு மாதிரியான நாடு, எல்லா பிரச்னைகளையும் தனது சுய நலத்தை முன்னிறுத்தியே பார்க்கக் கூடிய நாடு.  எல்லோரும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என உலகை கட்டாயப்படுத்தும் நாடு. சீனா அரசர்களால் ஆளபட்ட நாடு. மங்கோலிய பரம்பரை ஆண்ட பின்பும் சீன அரசர் 1945 வரை ஆண்டார். அப்படிபட்ட சீனா 18ம் நூற்றாண்டில் உலகில் இருந்து தனித்து இருந்தாலும் மன்னர் ஆட்சியில் பலமாகத்தான் இருந்தது. இதனால் பிரிட்டிசாரால் அதனை கைப்பற்ற முடியவில்லை ஹாங்காங்கை கைப்பற்றியதோடு நிறுத்தி கொண்டார்கள்.

சீனாவுக்குள் ஊடுருவ அவர்களால் முடியவில்லை. இக்காலத்தில் திபெத் சீன அரசரின் கட்டுபாட்டில் இருந்த நாடு என்றாலும் இந்தியாவினை ஆண்ட பிரிட்டிசார் சில எல்லை குழப்பங்களை இந்திய சீன எல்லையில் செய்தனர். அதை சீனா அங்கீகரிக்கவில்லை. ஆனால் போரை தொடங்கவுமில்லை. சீனா பண்டைய ராஜநீதிகளை இன்றும் பின்பற்றும் நாடு "பலவீனமான காலத்தில் சமாதானத்துக்கு செல்லாதே" என்பது அவர்களின் பிரசித்தியான ராஜதந்திரம். அதனால் பிரிட்டிசாரின் எல்லை சிக்கலை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. மாறாக பலவீனமான நிலை இருந்ததால் பின்னாளுக்கு ஒத்தி வைத்தார்கள்.

அப்படி தன்னை தற்காத்த சீனா 1940களில் உள்நாட்டு குழப்பம் கம்யூனிஸ்ட் போராட்டங்களால் பலவீனமான பொழுது ஜப்பான், சோவியத் யூனியன் என பல நாடுகள் அவர்களின் எல்லைகளை விழுங்கின, பலமற்ற சீனாவால் எதையும் செய்யமுடியவில்லை. 1950களில் சீன எல்லைகளை மீட்போம் என சொல்லித்தான் மாவோ பெரும் வெற்றி பெற்றார். அதை தொடர்ந்து தான் திபெத் ஆக்கிரமிப்பு இந்திய சீன எல்லை  பிரச்னை தொடர்ந்தது. அது இன்றுவரை நீடிக்கின்றது.

பிரிட்டிஷார் இட்டது எங்கள் எல்லை என்பது இந்தியாவின் வாதம். அதை நாங்கள் ஏற்றதே இல்லை உன் பழைய முதலாளி வார்த்தையெல்லாம் இங்கே செல்லாது என்பது சீன வாதம். இதே பிரச்னையினை அக்கம் பக்கம் 11 நாடுகளிடம் செய்யும் நாடு சீனா. பிலிப்பைன்ஸ், பர்மா, மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம், ஜப்பான், ரஷ்யா என சீனாவின் எல்லைத்தகராறால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் மிக நீளம். எல்லாம் பழைய தமிழ் சினிமா பாணியில் "எங்க தாத்தாவ நீங்க அடிச்சி பிடுங்கின நிலம்டா, நான் விடமாட்டேண்டா" போன்ற அதே வசனம்.

அதை பேசாவிட்டால் சீன கம்யூனிஸ்டுகள் ஆட்சியினை கைபற்றியதிலும் அர்த்தமில்லை. அப்படிபட்ட சீனா 1960ல் சோவியத்திடமும் அதாவது ரஷ்ய எல்லையிலும் உரசியது. ஆனால் அப்பொழுது பலமாய் இருந்த சோவியத்திடம் மோதாமல் பதுங்கியது. காரணம் சோவியத்தோடு மோதுமளவு சீனா பலமாக இல்லை. இதனால் "பலவீனமான நிலையில் சமாதானம் பேசாதே" என மவுனமானது.

அப்பொழுது சீனத்து மாவோ தந்திரமான காரியம் செய்தார். அதற்கு காரணம் இந்தியாவின் இந்திராகாந்தி அம்மையார். 1972ல் வங்கதேசம் உருவானபொழுது இந்தியா சோவியத் உறவு வலுவானது. வாய்ப்பு பார்த்த மாவோ அமெரிக்காவின் பக்கம் சாய்ந்தார். மாவோ பெரும் தந்திரசாலி. சோவியத்திடம் பணபலமில்லை. பணபலமில்லாமல் சீனா வளராது என்பதால் பெரும் பணமும், அதனால் பெரும் படையும் அவசியம் என உணர்ந்து பல தந்திரங்களை செய்தார்.

அவரின் நோக்கம் இழந்த எல்லைகளை மீட்க வேண்டும். பலம் வாய்ந்த ராணுவம் வேண்டும். அதற்கு பெரும் தொழிலும் வருமானமும் வேண்டும் என்பதே இதுதான் மாவோ, அவரின் சீனப்பற்று. அமெரிக்க அதிபர் நிக்சனும், சீன அதிபர் மாவோவும் சந்தித்த பின்னரே சீனா சீற்றம் கொண்டு வளர தொடங்கியது. 1975க்கு பின் அசுர வேகத்தில் வளர்ந்தார்கள். ஒரே ஆசி அமெரிக்கா. மாவோ மறைந்தாலும் ஜியோ டெங் பிங் அதனை தொடர்ந்தார். சீனா இன்னும் வளர்ந்தது. இக்காலத்தில் ஜனதா தளம், பஞ்சாப் குளறுபடி, தமிழக திமூக, வங்க கம்யூனிஸ்ட் என இந்தியா குழம்பி கிடக்க சீனா வளர்ந்தது.

1990ல் சோவியத் கலைந்ததும் நிமிர்ந்து உட்கார்ந்தது சீனா. அப்பொழுதே சில ரஷ்ய பகுதிகளை மெல்ல வளைத்தார்கள். பின் பொருளாதார மயமாக்கல் என அமெரிக்கா தாராள தளர்வுகளை வழங்க, சீனா உலகின் இரண்டாம் பொருளாதார நாடாயிற்று. இன்று சுமார் 3000 விமானங்கள், 500 கப்பல்கள் என அமெரிக்காவினை விட அதிக எண்ணிக்கை கொண்ட கப்பலும் விமானமும் கொண்ட நாடாக சீனா முன்னணியில் நிற்கின்றது.

சரி, இப்படி பலம் வாய்த்தும் சண்டையிடுவார்களா என்றால் இல்லை, அதுதான் அடுத்த தந்திரம். தன் பலத்தை பெரிதாக பிம்பமாக‌ காட்ட வேண்டுமே தவிர அதனை சண்டையிட்டு காட்ட கூடாது. ஒருவேளை வீழ்ந்து விட்டால் அடக்கமே செய்து விடுவார்கள். அதனால் எக்காலமும் பயில்வான் போல அச்சுறுத்து. ஆனால் சண்டையிடாதே என்பது அவர்கள் தந்திரம். அந்த தந்திரத்தைத்தான் இன்றும் செய்கின்றார்கள்

நிச்சயம் அவர்கள் படை பெரிது. காட்டும் பலம் பெரிது. ஆனால் அதன் இயங்குதிறன் மற்றும் உண்மையான வலிமை பற்றி அமெரிக்காவே குழம்புகின்றது. சீனர்கள் உண்மையிலே சரியான ஆயுதம் வைத்திருகின்றார்களா இல்லையா அதன் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது அமெரிக்கா உட்பட யாருக்குமே தெரியாது. காரணம் அதுதான் தன் கையினை சீனா பூட்டியே வைத்திருக்கும் தந்திரம்.

அந்த சீன அதிபர் 12 அம்ச அமைதி திட்டத்துடன் ரஷ்யா சென்றார். அங்கு சென்றவர் அந்த 12 அம்சத்தையும் புட்டீனின் குப்பை தொட்டியில் வீசிவிட்டு, ரஷ்யாவின் பெரிய தொழில் வாய்ப்பை சீனாவுக்கு பெற்று விட்டு திரும்பி விட்டார். உக்ரைன் யுத்தம் தொடர்கின்றது. சீன அதிபர் பீஜீங் திரும்பியதும், சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை வழக்கம் போல் சீனத்து பரணி பாடின‌. அந்த பரணிதான் இப்போது புட்டீனை தலையில் கைவைக்க வைத்திருக்கின்றது.

அந்த சீனத்து பரணியில் "12 அம்ச திட்டத்தில் முக்கியமாக சீனா சொன்னது ஒரு நாடு இன்னொரு நாட்டின் இறையாண்மையினை மதிக்க வேண்டும். அப்படி உக்ரைனை ரஷ்யா மதிக்க வேண்டும் அதன் பகுதியினை ஆக்கிரமிக்க கூடாது. அப்படியே சீனாவினை ஆக்கிரமித்திருக்கும் நாடுகளும் உடனே சீனப்பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். ஜப்பான் ரஷ்யா, இந்தியா என பல நாடுகள் சீன எல்லைகளை ஆக்கிரமித்திருக்கின்றன. இது எங்கள் அமைதி கொள்கைக்கு எதிரானது.

சீனா உலகுக்கே அன்பும் கருணையும் சகோதரத்துவமும் கப்பல் கப்பலாக ஏற்றுமதி செய்யும் நாடு. ஆனால் எங்கள் பகுதியினை மீட்கும் விஷயத்தில் நாங்கள் நெருப்பு, நெருப்போடு விளையாட வேண்டாம். அதாவது உக்ரைனில் இருந்து ரஷ்யா வெளியேறும் பொழுது சீன பகுதிகளில் இருந்தும் வெளியேற வேண்டும் என பாட்டை பாட ஆரம்பித்துவிட்டது சீனா. இதுதான் சீனா. நிச்சயம் ரஷ்யாவுக்கு இப்பொழுது சீனாவினை விட்டால் யாருமில்லை.

மக்களாட்சி நாடான இந்தியாவினை விட தேர்தலே இல்லாத நிரந்தர ஆட்சி கொண்ட சீனா அவர்களுக்கு பொருத்தமானது. இன்று ரஷ்ய எண்ணெய் வர்த்தகமும் இதர வர்த்தகமும் சீனாவினை நம்பித்தான் இருக்கின்றது. நாளை நேட்டோ ரஷ்யா மேல் தாக்குதல் நடத்தினால் சீனா அவர்களுக்கு அவசியம். இப்படி ரஷ்யா தன்னிடம் சிக்கியதை அடுத்து புன்னகைக்கும் சீனா தன் பஸ்மாசுரன் வேலையினை காட்டி அவர்கள் மடியிலே உருவுகின்றது.

ஜி ஜின்பிங் வந்து சென்றதில் "எனக்கும் உயிர் நண்பன் உண்டு" என மகாபாரத துரியோதனன் போல உலகை பெருமையுடன் பார்த்த புட்டீன், இப்பொழுது தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார். உக்ரைனில் நுழைந்து சீன ஆதரவை கோரினால் சீனா ரஷ்யாவின் கிழக்கு பகுதிகளை கவரப் பார்ப்பதை கண்டு அவருக்கு அதிர்ச்சி. ஆனால் ஏதும் செய்ய முடியாது.

இதனால் கவுண்டமணி பாணியில் "இவன்கிட்ட உள்ள கெட்ட பழக்கம் இதுதாம்பா, இன்னும் திருந்தல" என தலையில் கைவைத்தபடி அமர்ந்திருக்கின்றது ரஷ்யா. தமிழக அரசியலோ உலக அரசியலோ எல்லாமே இப்படி சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றது, எல்லோருக்கும் அவரவர் நலன் முக்கியம் அதுதான் அரசியல்.

Tags:    

Similar News