முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் முறை: உண்மையில் பாதிப்பு யாருக்கு?
முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில் தமிழகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டால், அதிக பாதிப்புகளை சந்திக்கப்போவது மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் தான்.
முல்லைப்பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பலன் பெறுகிறது என்று பதிவேடுகளின் அடிப்படையில் கூறப்படுகிறது.
உண்மையில் தேனி மாவட்டத்திற்கும், திண்டுக்கல் மாவட்டத்திற்கும் முல்லைப்பெரியாறு அணை மூலம் மிக, மிக குறைந்த அளவே பலன்கள் கிடைக்கிறது. தேனி மாவட்டத்தில் மட்டும் 1200 சதுர கி.மீ., வனப்பகுதிகள் உள்ளன. சுருளியாறு, சண்முகாநதி, வைகை நதி, கொட்டகுடி ஆறு, வராகநதி, மஞ்சளாறு ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. சண்முகாநதி, சோத்துப்பாறை, வைகை, மஞ்சளாறு ஆகிய அணைகள் உள்ளன. ஏராளமான சிற்றாறுகள் உள்ளன. இவற்றில் ஒன்றாக முல்லைப்பெரியாறு பாய்கிறது. தவிர தேனி மாவட்டத்தின் பெரும்பான்மை நீர் தேவையினை இதர ஆறுகள் பூர்த்தி செய்கின்றன. முல்லைப்பெரியாற்றின் பங்கு இதில் மிக, மிக குறைவே. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 250 ஏக்கர் நிலங்கள் மட்டுமே முல்லைப்பெரியாறு மூலம் பாசனம் பெறுகிறது.
ஆனால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு வைகை நதியை விட்டால் வேறு வழியில்லை. இந்த வைகை நதியின் 60 முதல் 75 சதவீத தண்ணீர் தேவையினை முல்லைப்பெரியாறு தான் பூர்த்தி செய்கிறது. அணையின் நீர் மட்டம் குறைக்கப்பட்டதால் முதலில் அடி வாங்கியது சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் தான். மதுரை மாவட்டத்தின் நெல் சாகுபடி பெருமளவில் தடுமாறி வருகிறது.
தொடர்ச்சியாக 42 ஆண்டுகளாக இந்த பாதிப்பினை சந்தித்து வந்தாலும், எதற்காக இந்த பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு மூல காரணம் யார்? இப்படியே போனால் எதிர்காலம் என்னவாகும்? என இந்த மாவட்ட மக்கள் சிந்திக்கவேயில்லை. மக்கள் மட்டுமல்ல... விவசாயிகள் கூட சிந்திக்கவில்லை...
தேனி மாவட்ட மக்கள் கூட இல்லை... தேனி மாவட்ட விவசாயிகளில் சிலர் மட்டுமே முல்லைப்பெரியாறு அணை உரிமைக்காக போராடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஏட்டளவில் தான் உள்ளது. அதற்கும் முல்லைப்பெரியாறுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற நிலை தான் நிலவுகிறது.
இவ்வளவு சிக்கலான விஷயத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த சில விவசாயிகள் மட்டும் போராடி தீர்வை பெற்று விட முடியுமா? கேரளாவில் ஒட்டுமொத்த மாநிலமும் பெரியாறு அணை விவகாரத்தில் ஓரணியில் உள்ளது. (இரு மாநில போராட்ட சமன்பாடுகளை அடுத்த செய்தியில் பார்க்கலாம்).
கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்காக நடக்கும் போராட்டத்தில் சுயநலம், வஞ்சகம், சூது, சூழ்ச்சி மட்டுமே உள்ளது. ஆனால் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு இது வாழ்வாதாரம், உயிரின் ஜீவாதாரம்... ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை நம் கையை விட்டு போய் விடாமல் இருக்க தமிழக அரசு மிக, மிக வலுவான சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.
தேனி மாவட்டத்தில் போராடுபவர்களுக்கும் அனுமதி வழங்கி வருகிறது. இதில் உண்மையிலேயே பாதிக்கப்பட்டுள்ள மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளும் பங்கேற்றால் தான் உங்களுக்காக பெரும் போராட்டத்தை நடத்தி வரும் தமிழக அரசுக்கும் உதவிகரமாக இருக்கும். தேனி மாவட்ட விவசாயிகளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். பிரச்னையின் உண்மை தன்மை என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
கேரளா சொல்வதில் பொய்யும், புரட்டும், நயவஞ்சகமும், சூதும், சூழ்ச்சியும், விதிமீறல்களும், அராஜகமும் மட்டுமே உள்ளது. தமிழக அரசும், விவசாயிகளும் உண்மை, நேர்மை என்ற வழியில் இதுவரை மிகுந்த அகிம்சை, மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே போராடி வருகின்றனர். நாம் அவர்களுடன் சேர்ந்து போராட நேரம் இல்லாவிட்டாலும், வாய்ப்பு இல்லாவிட்டாலும், பல்வேறு வகைகளில் தார்மீக ஆதரவையாவது தெரிவித்து ஊக்கப்படுத்தலாமே. உங்களுக்காக போராடுபவர்களும் சோர்ந்து விட்டால், நம் சந்ததிகளின் எதிர்காலமே பாழ்பட்டு விடுமே... கொஞ்சம் யோசித்து நிதானமாக நடவடிக்கையில் இறங்குங்கள்....