நாளை மறுநாள் 142 அடியை எட்டுமா முல்லைபெரியாறு அணை..!
கடந்த இரண்டு நாட்களாக அணைப்பகுதியில் மழை இல்லை. சிறிய அளவில் மழை பெய்தால் கூட அணை நீர்மட்டம் 142 அடியை எட்டி விடும்;
ரூல்கர்வ் முறைப்படி முல்லை பெரியாறு அணை நாளை மறுநாள் ( நவம்பர் 30ம் தேதி- செவ்வாய்க்கிழமை) 142 அடியை எட்டுமா? என்ற எதிர்பார்ப்புடன் விவசாயிகள் காத்திருக்கின்றனர்..
முல்லைபெரியாறு அணையில் 142 அடி நீரை தேக்க சுப்ரீம் கோர்ட் அனுமதித்தும், அதனை நிர்வகிக்க தனி கண்காணிப்புக்குழு அமைத்தும், ரூல்கர்வ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறைப்படி, நவம்பர் 30ம் தேதி தான் அணையில் 142 அடி நீர் தேக்க முடியும். அதற்கு முன்னதாக நீர் தேக்கும் முறைகள் குறித்து சுப்ரீம்கோர்ட் ஒரு அளவீட்டு பட்டியலுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
இதுவரை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த அணையிலும் அமலுக்கு வராத ஒருநடைமுறை கேரள அரசியல்வாதிகளின் நெருக்கடி காரணமாக முல்லை பெரியாறு அணைக்கு கொண்டு வரப்பட்டது. இடுக்கி தற்போது வரை நிரம்பி வழிந்தாலும் ரூல்கர்வ் முறை இடுக்கி அணைக்கு பொருந்தாது என கூறப்படுகிறது.
இவ்வளவு குழப்பங்கள், பாகுபாடு நிறைந்த அணுகுமுறைகளுக்கு இடையே நாளை மறுநாள் நவம்பர் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை அணையில் 142 அடி தண்ணீரை தமிழகம் தேக்க முடியுமா? என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
தற்போது அணையின் நீர் மட்டம் 141.65 அடியாக உள்ளது. 142 அடிக்கு இன்னும் புள்ளி 35 அடி நீர்மட்டம் மட்டுமே தேவை. அணைக்கு விநாடிக்கு 1847 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 900ம் கனஅடி நீர் தமிழகப்பகுதி வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்னும் 48 மணி நேரத்தில் புள்ளி 35 அடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களாக அணைப்பகுதியில் மழை இல்லை. சிறிய அளவில் மழை பெய்தால் கூட அணை நீர்மட்டம் 142 அடியை எட்டி விடும். கேரள அரசின் அராஜக செயல்களுக்கு முன்னர், நமது உரிமையை நிலை நாட்ட மழை நிச்சயம் வர வேண்டும். அணை நீர் மட்டம் 142 அடியாக உயர வேண்டும் என ஐந்து விவசாயிகள் அத்தனை பேரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.