ரூ.10 லட்சம் கோடி ஊழல்: தேனி கூட்டத்தில் ராஜா பகீர் தகவல்
இந்து கோயில்களில் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளது என பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹைச்.ராஜா பேசினார்.
தேனியில் பா.ஜ.,வின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாநில பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர் பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் மலைச்சாமி, வர்த்தக அணி தலைவர் கே.கே.ஜெயராம், நகர தலைவர் மதிவாணன், மருத்துவர் அணி முக்கிய பிரமுகர் டாக்டர் பாஸ்கரன், தேனி நகர பா.ஜ., முக்கிய பிரமுகர் சிவக்குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஹைச்.ராஜா பேசியதாவது: பா.ஜ., அரசின் (சாதனை பட்டியலை வாசித்தார்) சாதனைகளை மட்டும் மக்களிடம் பேசினால் போதாது. தி.மு.க., அரசினால் மக்கள் படும் வேதனைகளையும் மக்களிடம் சொல்ல வேண்டும். தமிழக உள்கட்டமைப்பு திட்டங்களில் மட்டும் பா.ஜ., அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. தி.மு.க., அரசு ஸ்டிக்கர் ஒட்டும் வேலை மட்டுமே பார்க்கிறது.
நேரு முதல் கருணாநிதி வரை பல தலைவர்கள் இந்திய நிலப்பரப்பினை பிற நாடுகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர். தற்போது, மோடி இந்திய நிலப்பரப்பினை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்து கோயில்களில் மட்டும் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் ஊழல் பட்டியல் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர், இன்று ஆதினத்தை மிரட்டும் அளவு வளர்ந்துள்ளார். தமிழகத்தில் கோயில்களை பராமரிக்க திறனற்ற தி.மு.க., அரசு சிதம்பரம் கோயிலை கைப்பற்ற முயற்சிக்கிறது. பல கோயில்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் தி.மு.க., அரசு அதனை செய்யவில்லை. இவ்வாறு பேசினார்.