கழிவுநீர் ஓடையாக மாறிய தேனி மாவட்ட ஆறுகள்
தேனி மாவட்டத்தில் பாயும் அத்தனை ஆறுகளும் கழிவுநீர் ஓடையாகவே மாறி விட்டன.
தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு, சுருளியாறு, வைகை ஆறு, வராகநதி, கொட்டகுடி ஆறு, மஞ்சளாறு என ஆறு ஆறுகள் உள்ளன. நுாற்றுக்கணக்கான ஓடைகள் உள்ளன.
இயற்கை கொட்டிக்கிடக்கும் தேனி மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களாக மழை இல்லை. இதனால் ஆறுகள், ஓடைகளில் நீர் வரத்து முழுமையாக நின்று போய் விட்டது. அத்தனை ஆறுகளிலும் தற்போது கழிவுநீர் மட்டுமே வருகிறது. ஆற்றுப்படுகைகள் அனைத்தும் கழிப்பிடங்களாக மாறி வி்ட்டன.
ஆற்றின் இருகரைகளிலும் உள்ள நிலங்கள் கூட பயிர் சாகுபடியின்றி வறண்டு கிடக்கின்றன. கிணறுகளில் உள்ள நிலத்தடி நீரை மட்டும் வைத்து, தற்போது விவசாயம் நடந்து வருகிறது. இதில் இன்னொரு பிரச்னையும் அதிகரித்து வருகிறது. அத்தனை ஆறுகளிலும் மீன்பிடிக்கின்றனர். தேங்கி கிடக்கும் நீரில் மருந்து கலந்து மீனை மயக்க நிலைக்கு கொண்டு வந்து பிடிக்கின்றனர். இதனால் நீர் மாசு அதிகளவில் ஏற்படுகிறது.
இந்த நீரினை விலங்குகள் குடித்தால் கூட உடனே இறந்து விடும். அந்த அளவு நீர் மாசு அதிகரித்துள்ளது. இந்த நீர் தான் வைகை அணையில் கலக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். இப்படி கழிவுநீரும், மீன் பிடிக்க மருந்து கலக்கப்படும் ஆற்று நீரும் சேர்ந்த அதிகளவில் சுற்றுச்சூழல் மாசுவினை ஏற்படுத்துவது மட்டுமின்றி, வைகை அணை நீரையும் மாசுபடுத்தி வருகின்றன.
ஆற்று நீரில் மருந்து கலந்து மீன் பிடிப்பவர்களை தடுக்க வேண்டும். மருந்து கலக்காமல் மீன்களை பிடிக்க அவர்களை் அறிவுறுத்த வேண்டும். இதன் மூலம் ஆற்று நீர் மாசுபடுவது மட்டுமின்றி... மருந்து கலந்த நீரில் பிடிக்கும் மீன்களை சாப்பிடும் மக்களுக்கும் பல்வேறு ஒவ்வாமைகள் ஏற்படுகின்றன. இது குறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.