போடி மெட்டு செல்லும் சாலையில் பாறைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

போடி முதல் போடி மெட்டு செல்லும் ரோட்டோரம் ஆபத்து நிறைந்த பாறைகள் அதிகம் உள்ளன.

Update: 2022-05-07 13:20 GMT

போடி மெட்டு ரோட்டோரம் பெயர்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள பாறைகள்.


போடியில் இருந்து போடி மெட்டு (மலை உச்சி வரை) இருபத்தி நான்கு கி.மீ., தொலைவில் சுமார் நாலாயிரத்து அறுநுாறு அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் உள்ள பதினேழு ஹேர்பின்பெண்டுகளை (கொண்டை ஊசி வளைவுகள்) கடந்தே போடி மெட்டு சென்று அங்கிருந்து மூணாறு செல்ல முடியும். இந்த தேசிய நெடுஞ்சாலை கொச்சி வரை செல்கிறது.

இதனால் வாகன போக்குவரத்து மிகவும் அதிகமாக உள்ளது. இந்த ரோட்டை தேசிய நெடுஞ்சாலைத்துறை நல்ல முறையில் விரிவாக்கம் செய்துள்ளது. ஆனால் ரோட்டில் பயணிப்பதில் பாதுகாப்பின்மையும், அச்சமும் நீடிக்கிறது. காரணம் ரோட்டோரம் பல இடங்களில் பாறைகளை வெடி வைத்து தகர்த்து எடுத்துள்ளனர். இவற்றை  முழுமையாக அகற்றவில்லை. பல இடங்களில் பாறைகள் எந்த நேரமும் உருண்டு விழும் நிலையே காணப்படுகிறது. மழை பெய்தால் ஏதாவது மூன்று அல்லது நான்கு இடங்களில் பாறைகள் சரிந்து  விடும். மரம் சாய்ந்து விடும். தற்போது உள்ள நிலையில் பலத்த சூறைக்காற்று வீசினாலும் பாறைகள், மரங்கள் விழ வாய்ப்புகள் உள்ளன.

ஆனால் இப்பகுதியின் நில அமைப்பு சூறைக்காற்றினை தடுத்து விடும். காற்ற வீசாவிட்டாலும் சாதாரண நேரங்களில் கூட பாறைகள் சரிந்து விழும் அபாயம் பல இடங்களில் உள்ளது. அப்படி ஏதாவது நடத்தால் இந்த வழித்தடத்தில் பயணிப்பவர்கள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த ரோட்டோரம் உள்ள அபாயம் நிறைந்த இடங்களில் இருக்கும் பாறைகளை முழுமையாக அகற்றி, பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்க வேண்டும்.

Tags:    

Similar News