பஞ்சு விலை உயர்வால் தமிழகத்திற்கு கூடுதல் பாதிப்பு ஏன் தெரியுமா?

உலக மார்க்கெட்டில் பஞ்சு விலை உயர்ந்துள்ளதால் குறிப்பாக தமிழகத்தில் அதிக பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-05-21 10:37 GMT

பைல் படம்.

இந்தியாவில் இந்த ஆண்டு பருத்தி விளைச்சல் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் சில கார்ப்பரேட் கம்பெனிகள் பருத்தி பஞ்சினை அதிகமாக கொள்முதல் செய்து பதுக்கினர். இதன் விளைவாக 55 ஆயிரம் ரூபாயாக இருந்த ஒரு கண்டி பஞ்சு (355 கிலோ) 90 ஆயிரத்தை எட்டியது. இதனால் விவசாயிகளுக்கு விலை கிடைத்தாலும் ஜவுளித்துறை ஒட்டுமொத்தமாக ஆட்டம் கண்டது. நுால் விலை கிடுகிடுவென உயர்ந்து, ஜவுளிகளின் விலை 25 சதவீதம் வரை உயர்ந்தது. இதனால் ஜவுளி ஏற்றுமதி செய்யும் அத்தனை கம்பெனிகளும் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் ஒரு கண்டி பஞ்சு விலை ஒரு லட்சத்து 10 ஆயிரத்தை எட்டும் என மத்திய அரசு மதிப்பீடு செய்ததால் விலையை கட்டுப்படுத்த, இறக்குமதி செய்யப்படும் பஞ்சுவிற்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரியை ரத்து செய்தது. மத்திய அரசின் இந்த முயற்சி பலன் அளிக்கும் என மதிப்பிட்டிருந்த நிலையில், உலக மார்க்கெட்டிலும் விலை உயர்ந்ததால் அந்த மதிப்பீடும் பொய்த்து போனது.

குறிப்பாக இந்தியாவிற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதியாகிறது. அந்த நாடுகளிலும் விளைச்சல் பாதிக்கப்பட்டு, விலை உயர்ந்தது. அந்த நாடுகளுக்கு ஆர்டர் போட்டு இந்தியா வந்து சேரும் பஞ்சு விலையும் ஒரு கண்டி ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உள்ளது. இதனால் பஞ்சு விலையை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. (ஒரு கண்டி பஞ்சு விலை ஒரு லட்சத்து 15 ஆயிரத்தை எட்டும் எனவும் ஒரு கணிப்பு உள்ளது).

இதில் தமிழகம் மேலும் சிக்கலி்ல் சிக்கி உள்ளது. காரணம் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த ஸ்பின்னிங் மில்களில் 55 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. தமிழகத்திற்கு மட்டுமே ஆண்டுக்கு ஒன்றரை கோடி பேல் (ஒரு பேல் 170 கிலோ) பஞ்சு தேவைப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 5 லட்சம் பேல்கள் மட்டுமே பஞ்சு உற்பத்தியாகும் நிலையில், மீதம் ஒரு கோடியே 45 லட்சம் பேல்களை வடமாநிலங்களில் இருந்து தான் கொண்டு வர வேண்டும். ஒரு லாரி பஞ்சு வடமாநிலங்களில் இருந்து தமிழகம் வந்து சேர தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. இந்த கூடுதல் செலவையும் தமிழக ஸ்பின்னிங் மில்களே ஏற்க வேண்டும். அதேபோல் நுால் நுாற்று ஏற்றுமதி செய்யும் போதும் இதே போல் கூடுதல் செலவாகிறது. இப்படி தமிழக ஸ்பின்னிங் மில்கள் கூடுதலாக இரட்டை செலவில் சிக்கி உள்ளன.

இதனால் பஞ்சு விலை உயரும் போது, இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழகம் அதிக பாதிப்பிற்கு உள்ளாகிறது. இது குறித்து தமிழக பஞ்சு வியாபாரி கே.எஸ்.கே., நடேசனிடம் கேட்ட போது, 'தற்போதைய நிலையில், உலகம் முழுவதும் பஞ்சு விலை உயர்ந்துள்ளது. இதனால் திருப்பூருக்கு வந்த வெளிநாட்டு ஆர்டர்கள் பங்களாதேஷ் நாட்டிற்கு சென்று விட்டது என கூறுவதுதெல்லாம் தவறான தகவல். பங்களாதேஷ் நாட்டிலும் பஞ்சு விலை இந்தியாவினை விட அதிகம் உள்ளது. இந்த பிரச்னையில் மத்திய அரசு தன்னால் முடிந்த அளவு அத்தனையும் செய்து விட்டது. இனிமேல், பஞ்சு விளைச்சல் அதிகரித்தால் மட்டுமே இப்பிரச்சினை தீர்வுக்கு வரும். பஞ்சு அறுவடைக்கு வர இன்னும் நான்கு மாதங்கள் வரை ஆகும். வரும் ஆண்டில் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பருத்தி விளைச்சல் அதிகரித்தால் தான் இப்பிரச்சினையில் ஒரு நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.

Tags:    

Similar News