முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த கிராம ஊராட்சிகளில் தீர்மானம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்த 300க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update: 2022-10-02 13:32 GMT
முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டத்தை உயர்த்த கிராம ஊராட்சிகளில் தீர்மானம்

முல்லைப்பெரியாறு அணை.

  • whatsapp icon

கேரள மாநிலத்தில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கர்னல் பென்னி குவிக் என்பவரால் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணை தமிழகத்தின் தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்பட ஐந்து மாவட்ட மக்களின் பாசன தேவையையும், குடிநீர் பிரச்சினையையும் தீர்த்து வைக்கிறது. முல்லைப்பெரியாறு  இல்லை என்றால் இந்த ஐந்து மாவட்டங்களின் சாகுபடி கேள்விக்குறியாக அமைந்து விடும்.

முல்லைப்பெரியாறு அணை கேரள மாநிலத்தில் அமைந்து இருந்தாலும் மொழிவாரி மாநிலங்கள் அமைந்த போது ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி அந்த அணையை பராமரிக்கும் பொறுப்பு தமிழக பொதுப்பணித்துறையின் வசம் உள்ளது. ஆனாலும் அந்த அணைக்கு எதிராக கேரள அரசும் அங்குள்ள அரசியல்வாதிகளும் அவ்வப்போது விஷம பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி தரும் விதமாக முல்லைப்பெரியாறு அணையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 152 அடி நீர் தேக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுமாறு கிராம ஊராட்சிகளுக்கு பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்து இருந்தது.

இந்த வேண்டுகோளை ஏற்று கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஐந்து கிராம ஊராட்சிகளிலும் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் 'முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டத்தை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 152 அடியாக உயர்த்த வேண்டும், இதற்கு தடையாக உள்ள அத்தனை விஷயங்களையும் முறியடிக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் போடி அணைக்கரைப்பட்டி, டி.சிந்தலைச்சேரி, சின்னமனூர் எர்ணம்பட்டி, புலிகுத்தி,உட்பட பல ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதே தீர்மானம் சிவகங்கை மாவட்டம் இடையமேலுார் ஊராட்சி, மேலப்பூங்கொடி ஊராட்சி, கீழப்பூங்கொடி ஊராட்சி, உறங்கான்பட்டி ஊராட்சி, அலவாக்கோட்டை, அழகிச்சிபட்டி உட்பட தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்டங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த தீர்மானங்களை பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வரவேற்று உள்ளது.

Tags:    

Similar News