குஷ்பு-வின் திடீர் ராஜினாமா பின்னணி?

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியினை குஷ்பு ராஜினாமா செய்திருக்கிறார்.;

Update: 2024-08-17 06:39 GMT

நடிகை குஷ்பூ 

குஷ்பூ ராஜினாமா செய்த சம்பவம் தொடர்பான டாப்பிக் தான் தற்போது அரசியல் டாக் ஆக உள்ளது. இது குறித்து நம்மிடம் பேசிய விவரப்புள்ளிகள், "திரைத்துறையில் பிரபல நடிகையாக இருந்தவர்  குஷ்பு. இவர் கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க-வில் இணைந்தார். பின்னர் தலைமையுடன் ஏற்பட்ட உரசலின் காரணமாக தி.மு.க -விலிருந்து விலகினார்.

பிறகு 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். சுமார் 6 ஆண்டுகள் அந்த கட்சியில் பயணித்தார். அதன் பின்னர் பாஜக-வில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால் தேர்தல் முடிவில் தோல்வியைச் சந்தித்தார். பின்னாளில் அவருக்குத் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த சூழலில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என குஷ்பு எதிர்பார்த்திருந்தார் என சொல்லப்பட்டது.


ஆனால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிறகு தமிழிசை உள்ளிட்ட வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்தார். முன்னதாக உடல்நலக்குறைவின் காரணமாகப் பாதியிலேயே பிரசார களத்திலிருந்து ஒதுங்கினார். இந்தச் சூழலில் தான் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மேலும் தான் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக குஷ்பு அறிவித்துள்ளார்" என்றனர்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குஷ்பு, "அரசியலில் 14 ஆண்டு கால சேவைக்குப் பிறகு, இன்று ஒரு இதயப்பூர்வமான மாற்றத்தை உணர்கிறேன். உயர்ந்த கட்சியாக விளங்கும் பா.ஜ.க-வில் முழுமையாகச் செயல்படுவதற்காகத் தேசிய மகளிர் ஆணையத்திலிருந்து என் பதவியை ராஜினாமா செய்து விட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்கு நன்றிகள்.

என்னுடைய விசுவாசமும், நம்பிக்கையும் எப்போதும் பா.ஜ.க உடன் தான் இருக்கும். தீவிர அரசியலில் ஈடுபட முடியாதபடி தேசிய மகளிர் ஆணையத்தில் அதற்கென சில கட்டுப்பாடுகள் இருந்தன. அதனால் தான் முன்னெப்போதும் இல்லாத உற்சாகத்துடன், நான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்து விட்டேன்.

இப்போது நான் சுதந்திரமாக, முழுமனதுடன் சேவையாற்ற முடியும். சென்னை கமலாலயத்தில் நடக்க உள்ள கொடியேற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். தீவிர அரசியலிலிருந்து என்னுடைய இந்த இடைவெளி, பிரதமரின் தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கான எனது தீர்மானத்தை வலுப்படுத்தியுள்ளது.

வதந்தி பரப்புபவர்கள் அமைதியாக இருக்கலாம். என்னுடைய இந்த மறுவருகை நேர்மையானது. கட்சி மீதும் மக்கள் மீதும் நான் கொண்ட அசைக்க முடியாத அன்பின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு" என்றார். அரசு தரப்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டு இருக்கும் தகவலில், 'கடந்த ஜூன் 28-ம் தேதியே குஷ்பு தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதனை ஜூலை 30ம் தேதி துறை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்' எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

தீவிர அரசியலில் ஈடுபடுவதற்குத் தான் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக குஷ்பு சொன்னாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் கமலாலய சீனியர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் நிர்வாகிகள் சிலர், "தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பதவியேற்ற பிறகு அதிக முக்கியத்துவம் கிடைக்காத நிர்வாகிகளில், குஷ்புவும் ஒருவர்.

குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார். அதற்கு டெல்லியிலும் முயற்சி செய்து வந்தார். ஆனால் கிடைக்கவில்லை. இந்த அதிருப்தியிலிருந்தவரை கட்சித் தலைமை தீவிர பிரசாரத்தில் ஈடுபடும்படி அறிவுறுத்தியது.

அதன்படி ஒருசில பிரசாரங்களில் மட்டும் கலந்து கொண்டார். பிறகு உடல்நிலையைக் காரணம் காட்டி பிரச்சாரக் களத்திலிருந்து வெளியேறினார். அப்போது உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்தது உண்மைதான். எனினும் சீட் கிடைக்காத அதிருப்திதான் அவரை மிகவும் சோர்வடையச் செய்திருந்தது. மேலும் முன்னதாக வழங்கப்பட்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலும் அவருக்குப் பெரிதாக விருப்பம் இல்லை.

இதற்குத் தன்னை தீவிர அரசியலில் ஈடுபடாமல் தடுப்பதற்காக எதிர் தரப்பினர் செய்த வேலை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். மேலும் இதனால் தீவிர அரசியலிலும் ஈடுபட முடியவில்லை என குஷ்பு அப்செட்டில் இருந்தார். மறுபக்கம் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் அண்ணாமலை தரப்பு அழைப்பதில்லை என்ற வருத்தமும் அவருக்கு இருந்தது.

இதையடுத்துதான் தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்தார். இனி அவர் சொன்னது போலவே தீவிர அரசியலில் ஈடுபடுவார். இந்தச்சூழலில்தான் மேல் படிப்புக்காக அண்ணாமலை வெளிநாடு செல்ல இருக்கிறார். இந்த காலகட்டத்தில் செயல் தலைவரை நியமிக்க டெல்லி ஆலோசித்து வருவதாகப் பேச்சு அடிபடுகிறது. அதற்குப் பலரும் காய் நகர்த்தி வருகிறார்கள். தற்போது அந்த ரேஸில் குஷ்புவும் இணைந்திருக்கிறார் என்கிறார்கள். ஆனால் செயல் தலைவர் நியமிப்பது என்பது வெறும் ஆலோசனை மட்டத்தில் தான் இருக்கிறது.

இன்னும் உறுதியாகவில்லை. வெளிநாடு சென்றாலும் அண்ணாமலையே தான் தலைவராக நீடிப்பார் என்ற தகவலும் சொல்லப்ப்படுகிறது. இணையதளம் வாயிலாக அவர் கட்சி நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். அதேநேரத்தில் அண்ணாமலைக்கு எதிராக குஷ்பு அதிரடி அரசியல் செய்வதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஏற்கனெவே அதிருப்தியில் இருக்கும் தலைவர்கள் அவருடன் கைகோர்க்கவும் வாய்ப்பு உள்ளது. தமிழிசை போன்று குஷ்புவும் நேரடி அரசியலை விரும்புவதும் மகளிர் ஆணைய பதவி ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது" என்கின்றனர்.

Tags:    

Similar News