தென் மாவட்ட மக்களுக்கு கூடலூரில் இருந்து அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள்

கூடலுாரில் இருந்து துாத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Update: 2023-12-21 16:48 GMT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

சென்னையில் புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தமிழகம் மீளும் முன்னர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை பெரும் மழை புரட்டிப்போட்டு விட்டது. ஒரே நாளில் அதிகபட்சமாக பெய்த மழையால், இந்த நான்கு மாவட்டங்களும் வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றன.

மழை குறைந்து நான்கு நாட்களை கடந்தும் இன்னும் பல இடங்களில் வெள்ளம் வடியவில்லை. தென்மாவட்டங்கள் கடந்த நுாறு ஆண்டுகளில் இது போன்ற கடும் பாதிப்புகளை சந்தித்தது இல்லை. பிறருக்கு உதவியே பழக்கப்பட்ட தென்மாவட்ட மக்கள், இன்று கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு நிவாரணபொருட்கள் சென்று கொண்டுள்ளன.

துாத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சேவாபாரதி அமைப்பினர் திருமண மண்டபம் பிடித்து உணவு சமைத்து வருகின்றனர். இவர்கள் உணவு சமைத்து வழங்க உதவியாக தேனி மாவட்டம் கூடலுாரில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் இணைந்து 4 டன் காய்கறிகளை சேர்த்து, பாரதீய கிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு தலைமையில் அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பாரதீய கிஷான் சங்க செயலாளர் கொடியரசன், பொருளாளர் ஜெயபால், துணை செயலாளர் கர்ணன், உறுப்பினர் சரண் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News