பேபி அணை பலப்படுத்த கொத்தனார்,சித்தாள் வேலைக்கு வருகிறோம்: விவசாயிகள்
பேபி அணையினை பலப்படுத்த கொத்தனார், சித்தாள் வேலைக்கு வருகிறோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.;
முல்லை பெரியாறு அணையின், பேபி அணையினை பலப்படுத்தும் பணிக்கு கொத்தனார் வேலை, சித்தாள் வேலைக்கு வரத்தயாராக இருக்கிறோம் என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: மலையாள இயக்குனர் சோகன்ராய் இயக்கிய டேம் 999 என்ற ஆவணப்படம் பெரும் பிரச்னைகளை ஏற்படுத்தியது. அதேபாணியில் தற்போது எல்தோஸ்தாமஸ் என்பவர் டேம் 99&999 என்ற ஆவணப்படத்தை மீண்டும் எடுத்து வருகிறார். தமிழக கேரள மக்களிடையே மோதலை துாண்டும் வகையில் இந்தப்படம் எடுக்கப்படுகிறது. இது மிகவும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முல்லை பெரியாறு அணையில் 152 அடி உயர்த்திற்கு நீர் தேக்கப்படும் என அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பினை நாங்கள் நம்புகிறோம். இந்த அறிவிப்பு படி பேபி அணையினை தமிழக அரசு பலப்படுத்த தொடங்கினால், நாங்கள் அதாவது ஐந்து மாவட்ட விவசாயிகள் கொத்தனார், சித்தாள் வேலைக்கு வருகிறோம். இவ்வாறு கூறினார்.