குடியிருப்புகளுக்குள் வரும் வனவிலங்குகளைத் தடுக்க அதிவிரைவு பாதுகாப்பு படை
இடுக்கி மாவட்டத்தில் குடியிருப்புகளுக்குள் வரும் வனவிலங்குகளை தடுக்க 42 இடங்களில் அதிவிரைவு பாதுகாப்பு படை முகாம்;
இடுக்கி மாவட்டம் முழுவதும் கடுமையான வனநிலங்கள் நிறைந்த மாவட்டம். இங்குள்ள வனங்களில் அனைத்து வகையான வனவிலங்குகளும் உள்ளன.
குறிப்பாக யானைகள் நடமாட்டம் மிக அதிகளவில் உள்ளன. கடந்த வாரம் கூட ஆனையிரங்கல் அணைப்பகுதியில் ஓரு முதியவரை யானை மிதித்து கொன்றது. இது போல் அடிக்கடி குடியிருப்புகளுக்குள் வரும் யானைகளை தடுக்க அதிவிரைவு பாதுகாப்பு படையினரை கேரள வனத்துறை நிறுத்தி உள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் மட்டும் இவர்கள் 42 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வரும் குடியிருப்பு பகுதிகளை தேர்வு செய்தே இவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வனவிலங்குகளை கையாளும் பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய தரைப்படை போல் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.
வனவிலங்குகள் வந்தால் உடனே அங்கு விரைந்து சென்று மக்களை கொன்று விடாமல் பாதுகாப்பது, வனவிலங்குகளை திசைதிருப்பி மீண்டும் வனத்திற்குள் அனுப்புவதே இவர்கள் பணியாகும். மாவட்டம் முழுவதும் இவர்கள் இப்பணியில் ஈடுபட்டாலும், நிரந்தரமாக அடையாளம் காணப்பட்டுள்ள 42 இடங்களில் இவர்கள் 24 மணி நேரமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் தேனி மாவட்டத்திலும் வனவிலங்குகளால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கேரளா போல் சிறப்புபடைப்பிரிவை உருவாக்கி பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.