பெரியாறு அணையினை பாதுகாக்க குமுளி நோக்கி திரண்டு வாருங்கள்: விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்

பெரியாறு அணையினை பாதுகாக்க குமுளி நோக்கி வரும் செப்டம்பர் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரண்டு வாருங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-19 03:15 GMT

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.பென்னிகுயிக் பாலசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

இதோ உடையப்போகிறது.... அதோ உடையப் போகிறது என்று முல்லைப் பெரியாறு அணையை நோக்கி மலையாளிகள் கைநீட்டி, இன்றைக்கு 45 ஆண்டுகள் கடந்து இருக்கிறது. ஆனாலும் கூட ஒரு சின்னஞ் சிறு கீறல் கூட முல்லைப் பெரியாறு அணையில் இதுவரை இல்லை, இனிமேலும் ஏற்படப்போவதில்லை.

அந்த அளவிற்கு உயரிய தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட முல்லைப் பெரியாறு அணை இன்று உடைந்து விடும் நாளை உடைந்து விடும் என்று கேரள நாட்டில் கூக்குரல்கள் எழுவதும், அடங்குவதுமாக காலம் கடந்து கொண்டே இருக்கிறது.

மலையாள மக்களின் சிறப்புமிக்க திருவிழாவான ஓணம் திருநாள் அன்று இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்களில், 47 இடங்களில் முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும், நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்கிற பல்வேறு கோரிக்கைகளுடன், உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி இருக்கிறது பல்வேறு மலையாள இனவெறி அமைப்புகள்.

இரண்டு முறை ஆட்சியை இழந்தாலும், கடந்த இரண்டு முறை நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இடதுசாரிகளை ஒற்றை இலக்கத்தில், அதாவது ஒரே ஒரு சீட்டுடன் (ஆலப்புழா மற்றும் ஆலத்தூர்) இடதுசாரிகளை வீழ்த்திய காங்கிரஸ், இந்த முறை நேரடியாக களத்திற்கு வந்திருக்கிறது.

வழக்கமாக முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக முண்டா தட்டி வரும் வலதுசாரி கிறிஸ்தவ என். ஜி. ஓ க்களையெல்லாம் பின்னுக்கு தள்ளி, இன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் முதன்மை இடத்திற்கு வந்திருக்கிறது.

கிறிஸ்தவ மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடுக்கி மாவட்டத்தில், அவர்களுக்கு கூட்டம் சேர்வதில் நமக்கு வியப்பேதும் இல்லை. பேராயர்களும், ஆயர்களும் களத்திற்கே நேரடியாக வந்து, முல்லைப் பெரியாறு அணையை உடைப்போம் என்று சபதம் எடுத்திருக்கும் நிலையில், நேற்று முன்தினம் அதாவது ஓணம் திருநாளன்று உப்புதுறையிலும், வண்டிப்பெரியாரிலும் நடைபெற்ற உண்ணாவிரதம் ஒட்டுமொத்த கேரளத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

வண்டிப்பெரியாரில் உண்ணாவிரதத்தை நடத்திய காங்கிரஸ் கட்சி கவனமாக தமிழிலும் சுவரொட்டிகளை ஒட்டி கவனம் ஈர்த்தது. கூட்டத்தில் பேசிய இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினரான டீன் குறியா கோஸ், இந்த ஹை ரேஞ்ச் பகுதியை உருவாக்கியவர்கள் தமிழர்கள் என்று புழங்காகிதம் அடைந்து தமிழர் தன்னை தற்காத்துக் கொண்டார்.

அணையை மாற்ற வேண்டும் புதிய அணை கட்ட வேண்டும் என்கிற குரல்கள் காலை முதல் மாலை வரை வண்டிப்பெரியாரில் ஒலித்தது. இதே வண்டிப்பெரியாரில் விரைவில் முல்லைப் பெரியாறு அணையை காக்க வேண்டும் என்று நாங்கள் ஊர்வலம் நடத்த இருப்பது வேறு கதை. 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூணாறில் நடத்திய ஊர்வலத்தை போல, வண்டிப்பெரியாரில் நாங்கள் முல்லைப் பெரியாறு அணையை காக்க வேண்டும் என்று நடத்தப் போகும் ஊர்வலம் வெகு விரைவில் நடக்கும். முல்லைப் பெரியாறு அஜிடேஷன் கமிட்டி முன்னெடுத்த உப்புத்துறை உண்ணாவிரதத்தில்,சர்வதேச நிபுணர்களைக் கொண்டு அணையை ஆய்வு செய்ய வேண்டும். மத்திய நீர்வள ஆணையம் கொடுத்திருக்கும் 12 மாத கெடுவை குறைத்து, விரைந்து முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், போராட்டம் நீடிக்கும் என்றும்,உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு நாளும் வாழ முடியாது என்றும் தீர்மானங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

1970 ஆம் ஆண்டு வரை முல்லைப் பெரியாறிலிருந்து இடுக்கி வரை, அதாவது வல்லக்கடவு, வண்டிப்பெரியாறு,சப்பாத்து, உப்புத்துறை, ஏலப்பாறை வழியாக இடுக்கி வரை எந்த குடியேற்றமும் இல்லாத நிலையில், வகை தொகை இல்லாமல் ஆற்றின் இருபுறமும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். அணையை உடைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

எந்த சமர சமிதியோ, எந்த காங்கிரஸோ, எந்த பாஜகவோ, எந்த இடதுசாரி வலதுசாரி கும்பலோ, முல்லைப் பெரியாறு அணை மீது கை வைத்து விட்டு தப்பி செல்ல முடியாது.

இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் குரியா கோஸ், தன்னுடைய நிலை மறந்து தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக மக்களவையிலும்,மாநிலம் முழுவதும் இயங்கி வருவது கண்டனத்திற்குரியது.

முல்லைப் பெரியாறு அணையை எப்படியாவது இடித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஒட்டு மொத்த கேரளாவும் டெல்லியில் முகாமிட்டிருக்கும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது செப்டம்பர் 22 ஆம் தேதி, காலை 10 மணி அளவில், தேனி மாவட்டம் குமுளி எல்லையில் கேரளத்தின் வலதுசாரி இடதுசாரி பிற்போக்குவாதிகளை கண்டித்து, பெருந்திரள் முற்றுகைப் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். முல்லைப் பெரியாறு தண்ணீரைக் குடித்து வளர்ந்த உணர்வுள்ள ஒவ்வொருவரும் குமுளி எல்லைக்கு வந்து சேருங்கள்.

ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரம். 10 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம். தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் பல கோடி மக்களுக்கு தண்ணீர் வழங்கிய ஒரு அணை மீது கை வைக்க.. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீறி, வருபவன் எவனாகிலும் அங்கே சந்திக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags:    

Similar News