தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது, மாவட்ட நிர்வாகத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.;
பைல் படம்.
ஒரு மாதத்திற்கும் மேல் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா பாதிப்பு தேனி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரட்டை இலக்கத்தை கடந்து அதிகரித்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வாட்டி எடுத்து விட்டது. அதிகளவு உயிர்பலிகளும் ஏற்பட்டன. மக்கள் மிரண்டு போகும் அளவுக்கு கொரோனா தொற்று தாண்டவம் ஆடியது. இந்நிலையில் ஜூலை மாதம் முதல் படிப்படியாக குறைய தொடங்கி ஆகஸ்ட் மாதம் முழுக்க ஒற்றை இலக்கத்திலேயே நீடித்தது. அதுவும் ஆகஸ்ட் மாதம் பத்து நாட்களுக்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு மூன்று பேருக்கு மட்டுமே இருந்தது.
இந்நிலையில் ஆகஸ்ட் இருபத்தி நான்காம் தேதியும், இன்று இருபத்தி ஐந்தாம் தேதியும் பாதிப்பு சற்று அதிகரித்து இரட்டை இலக்கத்தை தாண்டி தினசரி பாதிப்பு பத்து, பதினைந்து என்ற வகையில் உள்ளது. இந்த பாதிப்பு மெல்ல அதிகரித்து, நிபுணர்கள் குழு எச்சரித்தது போல் செப்டம்பர் மாதம் மீண்டும் மூன்றாவது அலை தலைதுாக்குமோ என மாவட்ட நிர்வாகம் கலக்கத்தில் உள்ளது. இதனால் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் மீண்டும் கொரோனா சிகிச்சை மையங்களை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. செப்டம்பர் முதல் தேதி முதல் பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கொரோனா தொற்று இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்படுவது மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வினை ஏற்படுத்தி உள்ளது.