தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக 4வது நாளாக மழை பெய்தது.;
தேனி மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்தது. மாவட்டம் முழுக்க மூன்று பக்கமும் மலைகள் சூழ்ந்து பள்ளத்தாக்கிற்குள் அமைந்திருப்பதால், ஓரளவு மிதமான பருவநிலை தான் நிலவும். அப்படியிருந்தும் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பருக்கு பின்னர் மழை பெய்யவில்லை. ஏப்., மே மாதங்களில் வெயில் அதிகம் இருந்தது. மாவட்டத்தின் சராசரி வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒரு நாள் கூட தாண்டவில்லை. அதிகபட்சம் 98 அல்லது 99 டிகிரி பாரன்ஹீட்டை வெப்பநிலை தாண்டாத நிலையிலும், அனல் காற்று கடுமையாக இருந்தது. வெப்பஅலை மிகவும் கடுமையாக வீசியது. மக்கள் பெரும் சிரமங்களை அனுபவித்தனர்.
இந்நிலையில் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதேபோல் கடந்த வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது. வெள்ளிக்கிழமை மாவட்டம் முழுவதும் கடுமையான மழை பதிவானது. குறிப்பாக சோத்துப்பாறையில் 130 மி.மீ., பெரியகுளத்தில் 90 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பதிவானது. நேற்றும் தேனி, வீரபாண்டி உட்பட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இன்றும் தேனி உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. ஆக தொடர்ச்சியாக நான்காவது நாளாக மழை பதிவான நிலையில், நாளையும் பலத்த மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பெரியாறு, வைகை அணைகளுக்கு தலா விநாடிக்கு 100 கனஅடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. வைகை அணையில் இருந்து மதுரை, சிவகங்கை, ராமனாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன நிலங்களுக்கு 3072 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் 55.41 அடியாக உள்ளது. பெரியாறு அணை நீர் மட்டம் 114.95 அடியாகவே உள்ளது. பெரியகுளம், சோத்துப்பாறையில் பெய்த பலத்த மழையால் ஒரே நாளில் சோத்துப்பாறை அணை நிறைந்து நீர் மட்டம் 126.28 அடியாக உள்ளது. அணையின் நீர் மறுகால் பாய்கிறது.
பருவநிலை மாறியதால், மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து விட்டது. கடந்த மூன்று நாட்களாக பகலில் வெயில் தாக்கம் தென்பட்டாலும், இரவில் ஈரப்பதம் நிறைந்த காற்று வீசுவதால், மக்கள் சற்று நிம்மதியுடன் உள்ளனர். இந்த மழையும், ஈரப்பதமும் மாவட்டம் முழுவதும் கொசு உற்பத்தி அதிகரிக்க காரணமாகி விட்டது. வெயில் தாக்கத்தின் போது குறைந்திருந்த கொசுத்தொல்லை, இப்போது மாவட்ட மக்களை வதக்கி எடுத்து வருகிறது.