பிரச்னையை தேடிக் கொண்ட ராகுல்

சோனியா- மன்மோகன் சிங் கொண்டு வந்த சட்ட திருத்தத்தை ராகுல் கிழித்தெறியாமல் இருந்திருந்தால் இன்று அவர் தப்பியிருப்பார்.

Update: 2023-04-04 09:30 GMT

பைல் படம்

ராகுல் சூரத் குற்றவியல் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை அளித்த நிமிடமே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்ற சட்டத்தின் கீழ் ராகுல்காந்தியின் எம்.பி.பதவி பறிபோயிருக்கிறது. அடுத்து 8 ஆண்டுகள் அவர் எந்தத் தேர்தலிலும் போட்டி போட முடியாது.

இந்த சட்டத்தை மாற்றி லாலுவை சிறை செல்லாமல் காப்பாற்ற சோனியா – மன்மோகன் சிங் அரசு 2013 இல் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அதை அப்போது கிழித்துப் போட்டவர் ராகுல்காந்தி. 2019 தேர்தலில் ராகுல் பேசியது, மோடி சமுதாயத்தையே இழிவுபடுத்துவாக்க் கூறி பூர்னேஷ் மோடி என்ற பா.ஜ.க. எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் தான் 23.03.2023 தீர்ப்பு வந்திருக்கிறது. கிரிமினல் குற்றத்துக்காக 2 ஆண்டு தண்டனை பெற்றவர்களின் பதவி பறிபோகும்.

தண்டனைக் காலம் முடிந்து 6 ஆண்டுகள் அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பது நீண்ட நாட்களாக இருந்து வரும் சட்டம். அந்தச் சட்டத்தில் 1989-ல் ராஜிவ் அரசு ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, தண்டனை பெற்ற உறுப்பினர் நீதிமன்றத் தீர்ப்பு வந்ததிலிருந்து மூன்று மாதத்துக்குள் மேல் முறையீடு செய்தால், வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை அவரது பதவி நீடிக்கும் என்று திருத்தம் கொண்டு வந்தது. ஆனால், 2013-ல், அந்தத் திருத்தம் அரசியல் சாஸனத்துக்கு விரோதமானது என்று கூறி, அதை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அந்தத் தீர்ப்பினால் தான் தண்டனை பெற்ற உறுப்பினரின் பதவி பறிபோகும் என்ற நிலை சட்டத்தில் உருவாகியது.

அந்தத் தீர்ப்பிலிருந்து தண்டனை பெற்ற உறுப்பினர்களைக் காப்பாற்றவே சோனியா- மன்மோகன் சிங் அரசு, அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. தண்டனை உத்தரவுக்குப் பிறகு மூன்று மாதம் பதவி பறிபோகாது; அதற்குள் மேல் முறையீடு செய்து, அந்தத் தீர்ப்பு / தண்டனைக்கு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால், உறுப்பினரின் பதவி தொடரும் என்று மாற்றவே அந்த அவசரச் சட்டம். அந்தச் சட்ட நகலை ராகுல் அப்போது கிழித்தெறிந்தார். அவசரச் சட்டம் கைவிடப்பட்டது. அந்த சட்டம் அன்று நிறைவேற்றப்பட்டிருந்தால் ராகுலின் பதவி பறி போயிருக்காது.

கடந்த 8 ஆண்டுகளில் லாலு யாதவ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஷீத் மசூத், முகமது ஃபைஸல், உ.பி. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆஸம் கான் ஆகியோர் பதவி இழந்தனர். 2014 தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு, மோடி பா.ஜ.க.- ஆர்.எஸ்.எஸ். மீதான துவேஷமும் அவரது பேச்சுகளில் சேர்ந்து வெளிப்பட்டன. அவரது அவதூறு பேச்சுகளை முக்கியமானது. ஒன்று எதிர்த்து வழக்குகள் குவிந்தன. அதில் மூன்று ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மகாத்மா காந்தியைப் படுகொலை செய்தார்கள் என்று 2016-ல் அவர் பேசியது. காந்தியை ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்று கூறுவது அவதூறு என்று, ஸ்டேஸ்மன் பத்திரிகை உட்பட மற்றவர்களும் ஒப்புக்கொண்டு நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்டிருக்கின்றனர்.

ராகுல் பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் ஒருவர் அவதூறு வழக்குப் போட்டார். அதைத் தள்ளுபடி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகினார் ராகுல். வழக்குப் போட்டவர், ராகுல் மன்னிப்பு கேட்டால் வழக்கை வாபஸ் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் கூறினார். 'கூறியது கூறியதுதான், மன்னிப்புக் கேட்கமாட்டேன்" என்று ராகுல் பதில் கூறினார். "நீங்கள் ஒட்டுமொத்தமாக ஆர்.எஸ்.எஸ். கொலை செய்தது என்று கூறியது அவதூறு. மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் வழக்கைச் சந்தியுங்கள்' என்று கூறி உச்சநீதிமன்றம், ராகுல் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்கும் தொடருகிறது.

அப்போது ஒரு முறை உச்ச நீதிமன்றமே, "சௌக்கிதார் (மோடி) சோர்" என்று கூறிவிட்டது என்று பொய் கூறினார் அவர். அதை எதிர்த்து உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தது. ராகுல் அதன் முன்பு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார். பதவி இழப்பால், ராகுல் பிரதமர் வேட்பாளராக முடியாது. அவருடைய தலைமையை ஏற்காத எதிர்க்கட்சிகளும் சேர்ந்து, அனைத்துக் கட்சி மோடி எதிர்ப்பு அணி உருவாகும் வாய்ப்புக் கூடியிருக்கிறது. அது பா.ஜ.க.வுக்கு நல்லதல்ல என்பது நிச்சயம். எனவே, ஒரு வகையில் ராகுலின் பதவி இழப்பு, பா.ஜ.க.வுக்குக் கெடுதல்தான்.

Tags:    

Similar News