தேனி தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து டி.டி.வி.தினகரன் போட்டியா?

தேனி லோக்சபா தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து டி.டி.வி., தினகரன் போட்டியிருவார் என தகவல்கள் வெளி வருகின்றன

Update: 2023-01-10 01:45 GMT

பைல் படம்

வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி வடக்கே வாரணாசி (காசி) தொகுதியிலும், தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியிலும் (ராமேஸ்வரம் உள்ளடங்கியது) போட்டியிடுவார் என பா.ஜ.க தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் போட்டியிடுவதற்கான அத்தனை முன்னேற்பாட்டு ஆய்வுப்பணிகளும் நிறைவு பெற்று விட்டன என கூறப்படுகிறது.

இதே பாணியில் வரும் தேர்தலில் கேரளாவில் வயநாடு தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் ராகுல்காந்தி, தனது இரண்டாவது தொகுதியாக தமிழகத்தில் ஒரு பாதுகாப்பான தொகுதியை தேர்ந்தெடுக்க உள்ளார் என காங்கிரஸ் தரப்பில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் கன்னியாகுமரி தொகுதியில் பிரியங்கா காந்தியும் களம் இறங்க உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராகுல்காந்தி இப்படி போட்டியிட்டால் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடக்கூடும் என காங்கிரஸ் தயாரித்துள்ள பட்டியலில் தேனியும் இடம் பெற்றுள்ளது. தேனி தொகுதியில் தி.மு.க கூட்டணியில் ஏற்கனவே காங்காரஸ்  பலமுறை வெற்றி பெற்றுள்ளது. தவிர காங்கிரஸ்  வேட்பாளர் ஆருண் மிகவும் பலம் வாய்ந்த அ.தி.மு.க, வேட்பாளரான டி.டி.வி., தினகரனை இத்தொகுதியில் வீழ்த்தியதையும் காங்கிரஸ்  கட்சியினர் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

தற்போது தேனி மாவட்டத்தில் 3 சட்டசபை தொகுதிகளை கைப்பற்றி தி.மு.க. வலுவாக உள்ள நிலையில், கூட்டணியின் போது, தேனி தொகுதியை எப்படியும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு தரும். தி.மு.க.,- காங்., கூட்டணியுடன் ராகுல் எளிதில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. எனவே இதனை எங்களுக்கு பாதுகாப்பான தொகுதியாக தேர்வு செய்துள்ளோம். ஒரு வேளை ராகுல்காந்தி தேனியில் போட்டியிடாவிட்டால், ஆருண் எம்.பி யின் இரண்டாவது மகன் அல்லது தேனி டாக்டர் தியாகராஜன் போன்ற வலுவான வேட்பாளர்கள் எங்கள் கைவசம் உள்ளனர். எனவே தேனி தொகுதியை இம்முறை இழந்து விட மாட்டோம் என காங்கிரஸ்  கட்சியினர் கூறி வருகின்றனர்.

இதற்கிடையில் தேனி தொகுதியில் அ.ம.மு.க., சார்பில் டி.டி.வி., தினகரன் களம் இறங்க உள்ளார் என அக்கட்சியினர் கூறி வருகின்றனர். டி.டி.வி. தினகரனுக்கு தேனி தொகுதியில் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது. கட்சி ஓட்டுகளும், சமுதாய ஓட்டுகளும் டி.டி.வி., தினகரனை எளிதில் வெற்றி பெற வைத்து விடும். தேனி தொகுதியினை ஒருமுறை இழந்தாலும், ஒருமுறை எம்.பி. -யாக இருந்து தொகுதிக்கு அதிகம் பணிகள் செய்து, அனைத்து தரப்பு மக்களிடமும் பரிச்சயமானவர் டி.டி.வி. தினகரன் என அக்கட்சியினர் கூறுகின்றனர்.

தற்போது அ.தி.மு.க.- பா.ஜ.க( ஓ.பி.எஸ்., - டி.டி.வி., தினகரன்- சசிகலா உள்ளடங்கிய) கூட்டணி பற்றிய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் நல்ல முறையில் முடிவு ஏற்பட்டால் கூட்டணியில் டி.டி.வி. களம் இறங்குவார். இல்லாவிட்டால் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி., களம் இறங்குவார். எப்படியும் டி.டி.வி. தேனி தொகுதியில் போட்டி என்பது உறுதியாகி விட்டது. ஒருவேளை ராகுல்காந்தி களம் இறங்கினாலும், அவரை எதிர்த்து களம் இறங்க டி.டி.வி. தினகரன் தயாராகவே உள்ளார் என அ.ம.மு.க.வினர் கூறி வருகின்றனர். லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகவே இன்னும் 14 மாதங்கள் உள்ள நிலையில், இந்த தகவல் இப்போதே தேனி மாவட்ட அரசியல் களம் அனல் பறக்கத்தொடங்கியுள்ளது.  எப்படியும்  தேனி லோக்சபா தேர்தல் களம் அகில இந்திய அளவில் கவனம் பெறும் தொகுதியாக மாறப் போகிறது என்பதே நிதர்சனம்.

Tags:    

Similar News