போராட்டம் நடத்தி கைதான மக்கள் விடுதலையாக மறுப்பு: விடிய விடிய பேச்சுவார்த்தை
தேனி அருகே போராட்டம் நடத்திய மக்களை கைது செய்த போலீசார், அவர்கள் விடுதலையாக மறுத்ததால் விடிய, விடிய பேச்சுவார்த்தை நடத்தினர்.;
தேனி மாவட்டம், லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றில் பல ஆண்டுகளாக சலவை தொழிலாளர்கள் துணி துவைக்கும் சலவை மையம் உள்ளது. மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக இந்த இடத்தில் தடுப்பணை கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கு சலவை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள், இங்கு தடுப்பணை கட்டினால் 100 ஆண்டுகளுக்கும் மேலாக துணிகளை துவைத்து வாழ்வு நடத்தும் எங்கள் பிழைப்பு போய் விடும் எனவே வேறு இடத்தில் தடுப்பணை கட்டுங்கள் என கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்க மறுத்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு பணிகளை தொடங்கினர். உடனே சலவை தொழிலாளர்கள் அவர்களை முற்றுகையிட்டனர். கூடலுாரில் வசிக்கும் தனது உறவினர்கள் அத்தனை பேரையும் அழைத்தனர். அனைவரும் போராட்ட களத்தில் குதித்தனர். இவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். அங்கு சென்றதும் போலீசார் கொடுத்த உணவை சாப்பிட அந்த மக்கள் மறுத்து விட்டனர். போலீசார் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தனர். ஆனால் அந்த மக்கள் வெளியேற மறுத்து விட்டனர். தொடர்ந்து பட்டினியுடன், உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுக்கு ஏற்கனவே இந்த திட்டத்தை எதிர்த்து வரும் விவசாய சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் போலீசாருக்கு தலைவலி அதிகரித்தது, விடிய, விடிய பேச்சுவார்த்தை நடத்தி, இன்று காலை 10 மணிக்கு உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பேச்சு நடத்த முடிவு செய்தனர். அந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஒப்புக்கொண்ட மக்கள், நள்ளிரவு நீண்ட நேரம் கழித்து தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.