தேனியில் போலீசாரை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்
தேனியில், போலீசார் தேவையின்றி துன்புறுத்துவதாக புகார் கூறி ஒருதரப்பு மக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி அரண்மனைப்புதுார் முல்லைநகரில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட சிலரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அடிக்கடி இப்பகுதியில் வசிப்பவர்களை போலீசார் கைது செய்கின்றனர். உண்மை குற்றவாளிகளை கைது செய்வதற்கு பதிலாக அப்பாவி மக்களை தேவையின்றி சிரமத்திற்கு உள்ளாக்குகின்றனர் எனக்கூறி, இந்து எழுச்சி முன்னணி தேனி நகர செயலாளர் முத்துராஜ் தலைமையில் ஏராளமானோர் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு கூடினர்.
மேலும், குடம், சமையல்பாத்திரம், பாய் ஆகியவற்றை கலெக்டர் அலுவலகம் முன்பு வைத்தும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கீழே வீசியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கலாம். எந்த தவறும் செய்யாதவர்களை நள்ளிரவில் வந்து கைது செய்து, தடுக்க சென்ற பெண்கள், கர்ப்பிணிகளை தாக்குகின்றனர். இதனை தான் நாங்கள் செய்ய வேண்டாம் என்றோம் என, அவர்கள் தெரிவித்தனர்.