அரசு திட்டங்களை பெற்றுத்தர தனி அலுவலகம்: அசத்தும் தேனி நகராட்சி பாஜக வேட்பாளர்
அரசு நலத்திட்டங்களை அரசு பணிகளில் சேர பயிற்சியளிக்க தனி அலுவலகம் அமைக்க உள்ளதாக பாஜக வேட்பாளர் புவனேஸ்வரி தெரிவித்தார்
தேனி நகராட்சி 15வது வார்டில் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்கி உள்ள புவனேஸ்வரி, அரசு திட்டங்களை மக்களுக்கு பெற்றுத்தரவும், அரசு வேலைவாய்ப்புகளுக்கு மாணவ, மாணவிகளை தயார் படுத்தவும் தனி அலுவலகம் தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.
தேனி நகராட்சி 15வது வார்டு பா.ஜ., வேட்பாளர் புவனேஸ்வரி, தனது வார்டில் உள்ள மீறுசமுத்திரம் கண்மாயினை சீரமைத்து படகுபோக்குவரத்து விடுவதாக வாக்குறுதி கொடுத்திருந்தார். அதற்கு வார்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் புவனேஸ்வரி தனது கணவர் சிவக்குமரன் மற்றும் பா.ஜ., நிர்வாகிகளுடன் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
அப்போது அவரது தேர்தல் அறிக்கையை பாராட்டிய முக்கிய பிரமுகர்கள், வார்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அதிகம் தேவைப்படுகிறது. வார்டில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட புவனேஸ்வரி, 'தனது வார்டில் மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்களை மக்களுக்கு பெற்றுத்தரவும், மத்திய, மாநில அரசுகளின் வேலை வாய்ப்புகளை பெற்றுத்தர தனி பயிற்சி மையம் அமைக்கவும் வசதியாக புதிதாக ஒரு அலுவலகம் அமைக்கப்போவதாக' தெரிவித்தார்.