மானாவாரி அறுவடை தொடங்கியதால் மாட்டுத்தீவனங்களின் விலைகள் சரிவு!

தேனி மாவட்டத்தி்ல் மானாவாரி பயிர்களின் அறுவடை தொடங்கி உள்ளதால் மாட்டுத்தீவனங்களின் விலை கிலோவிற்கு 5 ரூபாய் வரை குறைந்துள்ளது.

Update: 2023-12-15 14:15 GMT

தேனி மாவட்டத்தில் நாட்டுப்பசு மாடுகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கையினை விட அதிக பால் தரும் உயர்ரக கலப்பின பசுக்களை வளர்ப்பவர்களின் எண்ணிக்கையே மிக, மிக அதிகம். இந்த பசுக்கள் தினமும் குறைந்தது 20 லிட்டர் வரை பால் தருகிறது. இதனால் இந்த பசுக்களுக்கு பசுந்தீவனமும், மாட்டுத்தீவனமும் தினமும் அதிகளவில் தர வேண்டும்.

கடந்த ஆறு மாத காலமாக மாவட்டத்தில் சராசரியாக மழை இருந்து கொண்டே இருந்ததால் பசுந்தீவனங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால் மானாவாரி சாகுபடி பாதிப்பால் மாட்டுத்தீவனங்களின் விலை அதிகரித்து இருந்தது. தற்போது மானாவாரி பயிர்களின் அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது.

இதனால் மாட்டுத்தீவனம் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் விலை குறைவால் ஒரு கிலோ மாட்டுத்தீவனம் விலை 5 ரூபாய் வரை குறைந்துள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: மக்காச்சோளம், சோளம், கம்பு வரத்து அதிகரித்துள்ளதால் விலைகள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளன.

அதேபோல் பருத்தி புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு விலைகளும் குறைந்துள்ளன. இதனால் இவற்வை மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் மாட்டுத்தீவனத்தின் விலை கிலோவிற்கு 5 ரூபாய் வரை குறைகிறது. ஒவ்வொரு மாட்டிற்கும் தினமும் அதிகளவு நாங்கள் மாட்டுத்தீவனம் தருகிறோம். இந்த விலை குறைவால் எங்களுக்கு மாதந்தோறும் கணிசமான அளவு பால் உற்பத்தி செலவு குறைந்துள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags:    

Similar News