கோயிலில் திருடியவர் கைது தேனி டி.எஸ்.பி.,க்கு பாராட்டு
கோயிலில் திருடியவரை கைது செய்து சிலைகளை பறிமுதல் செய்த தேனி டி.எஸ்.பி.,யை இந்து எழுச்சி முன்னணியும், பொதுமக்களும் பாராட்டினர்.;
தேனி அல்லிநகரம் ஆதிநாராயணன் கோயிலில் இரண்டு திருடர்கள் புகுந்து அங்கிருந்த இரண்டு சிலைகள், உண்டியல் உட்பட பொருட்களை திருடிச் சென்றனர். இது தொடர்பாக புகார் வந்ததும் தேனி டி.எஸ்.பி., பால்சுதன் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, பெரியகுளம் டி.கல்லுப்பட்டியை சேர்ந்த ஒரு வாலிபரை கைது செய்தனர்.
மற்றொரு வாலிபர் அடையாளம் கண்டறியப்பட்ட நிலையில், அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். திருடு போன சிலைகள் மீட்கப்பட்டன. போலீசாரின் துரித நடவடிக்கையை பாராட்டி, இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகளும் பொதுமக்களும் தேனி டி.எஸ்.பி.,யை சந்தித்து போலீசாரின் துரிதமான நடவடிக்கைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.