மலைவாழ் மக்களை மீட்ட தேனி மாவட்ட காவல்துறையினர்

மலைத்தேன் விற்பனையில் புரோக்கர்களின் பிடியில் இருந்து மலைவாழ் மக்களை தேனி மாவட்ட காவல்துறையினர் மீட்டுள்ளனர்

Update: 2023-11-14 03:22 GMT

மலைத்தேன் சேகரிப்பு பணியில் மலைவாழ் மக்கள் 

மலைவாழ் மக்கள் சேகரிக்கும் மலைத்தேனை ஒரு லிட்டர் எண்ணுாறு ரூபாய்க்கு வாங்க வேண்டும் என வியாபாரிகளுக்கு நக்சல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் விலை நிர்ணயம் செய்து கொடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் 2007 ம் ஆண்டு நக்சலைட்டுகள் நடமாட்டம் கண்டறியப்பட்ட பின்னர், அவர்களை முற்றிலும் தடுக்க நக்சல் ஒழிப்பு படை தனியே துவக்கப்பட்டது.

மாவட்டத்தில் மொத்தம் 23 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு மலை சார்ந்து வாழும் மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் நக்சலைட் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். அவர்களுக்கு ஜாதிச்சான்று, ஆதார் கார்டு, ரேஷன் அட்டை, ரேஷன் பொருட்கள் உட்பட அத்தனை வகையான அரசு சலுகைகளும் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். மலைவாழ் மக்களின் குழந்தைகள் அரசு விடுதிகளில் தங்கி உயர்கல்வி பயில தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

மலைவாழ் மக்களின் முக்கிய தொழில் மலைத்தேன் சேகரிப்பது. இதனை வியாபாரிகள் ஒரு லிட்டர் 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கி, வெளிமார்க்கெட்டில் 800 ரூபாய் வரை (மிகமிக சுத்தமான மலைத்தேன்) விற்பனை செய்து வந்தனர்.

நக்சலைட் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வியாபாரிகளையும், மலைவாழ் மக்களையும் இணைத்து கூட்டம் நடத்தி, ஒரு லிட்டர் மலைத்தேனுக்கு வியாபாரிகள் எண்ணுாறு ரூபாய் விலை வழங்க வேண்டும். நீங்கள் வெளியில் எவ்வளவு விலைக்கு விற்றாலும் கவலையில்லை என நிர்ணயம் செய்துள்ளனர்.

இதனால் புரோக்கர்களால் பல ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வந்த மலைவாழ் மக்களின் வருவாய் பெருமளவு உயர்ந்து வருகிறது. தவிர மலைவாழ் மக்களுக்கு தேவைப்பட்டால் வியாபாரிகள் முன்பணம் வழங்கி, தேன் வாங்கி கழித்துக் கொள்ளவும் ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர். ஆவணி மாதம் முதல் மலைத்தேன் சேகரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு மழை கடுமையாக இருப்பதால் தேன் எந்த அளவு கிடைக்கும் என்பது உறுதியாக தெரியவில்லை என நக்சலைட் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News