சின்னமனுார் அருகே சினிமா பாணியில் நாடகம் நடத்தி நகைகளை மீட்ட போலீசார்

சின்னமனுார் அருகே மார்க்கையன்கோட்டையில் திருடு போன நகைகளை போலீசார் சினிமா பாணியில் நாடகம் நடத்தி மீட்டனர்.

Update: 2022-04-09 03:18 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை வந்தவாசியை சேர்ந்தவர் ரெஜினா, 13. இவர் சின்னமனுார் மார்க்கையன்கோட்டையில் நடக்கும் திருவிழாவிற்கு வந்திருந்தார். இதற்காக தனது தாய் வீட்டிற்கு வந்திருந்த ரெஜினா தான் அணிந்திருந்த 12 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை வீட்டில் வைத்து விட்டு திருவிழா காண சென்றார். திரும்ப வந்து பார்த்து போது பணம், நகைகளை காணவில்லை.

இது குறித்து சின்னமனுார் போலீசில் புகார் செய்தார். விசாரணை நடத்திய போலீசார் அந்த காலனியை சேர்ந்தவர்கள் தான் திருடியிருக்க வேண்டும். வேறு நபர்கள் திருடவில்லை என்பதை அறிந்தனர். உடனே காலனி மக்களை ஒன்று திரட்டி, போலீஸ் மோப்ப நாய் இங்கு வரப்போகிறது. வந்தால் திருடியவர்களை கண்டு பிடித்து விடும். எனவே அதற்கு முன்னர் ஒரு வாய்ப்பு தருகிறோம். ஒரு அண்டாவில் தண்ணீர் நிரப்பி விடுகிறோம். நீங்கள் திருடிய நகையினை அந்த அண்டாவிற்குள் போட்டு விடுங்கள். திருடியவரின் கை ரேகையும் பதியாது. இல்லாவிட்டால் அத்தனை பேரின் கை ரேகையும் சேகரித்து நடவடிக்கை எடுப்போம் என அறிவித்தனர்.

அதேபோல் அண்டாவும் வைக்கப்பட்டது. அண்டாவிற்குள் 20 பேர் வந்து கைகளை விட்டு அலம்பி விட்டு சென்றனர். போலீசார் சோதித்த போது அதற்குள் திருடு போன நகைகள் இருந்தன. பணம் மட்டும் கிடைக்கவில்லை. நகைகளை மீட்ட போலீசார் உரியவரிடம் ஒப்படைத்தனர். பணம் திருடியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். நகைகள் மீட்கப்பட்டாலும், திருடியவர்கள் கண்டறியப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை தொடரப்போவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News