பள்ளி மாணவர்களை பாதுகாக்க கஞ்சா கும்பலை அழிக்க முயற்சி

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை பாதுகாக்க கஞ்சா விற்கும் கும்பலை ஒழிக்கும் நடவடிக்கையை போலீஸார் தொடங்கியுள்ளனர்;

Update: 2022-03-30 03:00 GMT

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி அரசு பள்ளி மாணவன் ஆசிரியை ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி உள்ளான். தேவாரத்திலும் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. இது போன்று மாணவர்களின் அத்துமீறல் செயல்பாடுகளுக்கு அவர்களின் தவறான பழக்கமே காரணம் என பரவலாக புகார் எழுந்தது. சேலம் மாவட்டத்திலும் அரசு பள்ளி ஆசிரியரை மாணவர் ஒருவர் பீர் பாட்டிலால் குத்த முயன்றார். இது போன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க டி.ஜி.பி., சைலேந்திரபாபு போலீஸ் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

இதன் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் தொடர் கஞ்சா தடுப்பு நடவடிக்கைகளை போலீசார் தொடங்கி உள்ளனர். தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகளின் அருகே கஞ்சா விற்பனை செய்பவர்கள், இந்த மாணவர்களுக்கு கஞ்சா, புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளார்.. நேற்று முதல் தேனி மாவட்ட போலீசார் இதற்கான பணிகளை தொடங்கி விட்டனர். தற்போது 24 மணி நேர கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தடுப்பு பணிகள் தொடங்கி உள்ளன. இன்னும் ஒரு மாதத்திற்குள் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் பெரும் அளவில் தடுக்கப்பட்டு விடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News