சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையை சுழற்றியும் உள்ளாட்சியில் ஒத்துழைப்பில்லை

பிளக்ஸ் வைக்கும் விஷயத்தில் தேனி மாவட்ட உள்ளாட்சிகள் மீது காவல்துறையினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Update: 2023-12-18 12:16 GMT

பிளக்ஸ் பேனர் - மாதிரி படம் 

‛பிளக்ஸ்’ வைக்கும் விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை வறுத்தெடுத்தும், தேனி மாவட்டத்தில் பல இடங்களில் பிளக்ஸ்களை அகற்ற உள்ளாட்சிகள் ஒத்துழைக்கவில்லை என காவல்துறையினர் ‛அதிருப்தி’ தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தேனி மாவட்ட காவல் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மென்பொறியாளர் சுபஸ்ரீ பிளக்ஸ் விபத்தில் சிக்கி உயிரிழந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசு, காவல்துறை நிர்வாகம், வருவாய்த்துறை, உள்ளாட்சிகள் என அத்தனை பேரையும் வறுத்தெடுத்து விட்டது.

இதன் பின்னர் காவல்துறைநிர்வாகம் முழுவீச்சில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த தொடங்கி உள்ளது. ஹெல்மெட், கார் சீட்பெல்ட் அணியாமல் யார் வந்தாலும் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான வாகன சோதனை தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிளக்ஸ், பேனர்களை அகற்றுவதிலும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் இன்னும் பல இடங்களில் உள்ளாட்சிகளிடம் இருந்து இதற்கு முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அதேபோல் வருவாய்த்துறையினரும் தங்களுக்கு தொடர்பில்லாத விஷயம் போல் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்கின்றனர். காவல்துறையினர் மட்டுமே சமூகத்தில் அரசியல் பலம் பெற்றவர்களுடன் போராட வேண்டிய நிலை காணப்படுகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்  மூலம் இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அத்தனை துறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே உயர்நீதிமன்ற உத்தரவை முழுமையாக அமல்படுத்த முடியும்.

தொடர்ந்து இந்த விஷயத்தில் கடும் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே ‛சமீபகாலமாக மளமளவென அதிகரித்து வந்த பிளக்ஸ் மோகத்தை’ முற்றிலும் அகற்ற முடியும். தற்போதைய நிலையில் பெரும்பாலான இடங்களில் பிளக்ஸ்கள், பேனர்கள் அகற்றப்பட்டு விட்டன. பிளக்ஸ்கள் அச்சிடுபவர்களுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டு்ள்ளன என்று கூறினர்.

Tags:    

Similar News