தேனி ஐ.டி.ஐ., மாணவர்களின் பசி போக்கும் போலீஸ் கேண்டீன்
தேனி ஐடிஐ மாணவர்களின் பசி போக்கும் சிறப்பான சேவையினை போலீஸ் கேண்டீன் பல ஆண்டுகளாக செய்து வருகிறது
தேனி மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகமும், ஐ.டி.ஐ., தொழிற்பயிற்சி நிறுவனமும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் ஏழைக்குடும்பத்தை சேர்ந்தர்வர்கள். தினமும் பஸ்சில் வந்து செல்பவர்களே அதிகம். இவர்களில் 80 சதவீதம் பேர் மதிய உணவு கொண்டு வருவதில்லை. 20 சதவீதம் பேர் மட்டுமே மதிய உணவு கொண்டு வருகின்றனர்.
மதிய உணவு கொண்டு வராத மாணவ, மாணவிகள் எஸ்.பி., அலுவலக கேண்டீனுக்கு சாப்பிட வருகின்றனர். இங்கு லெமன் சாதம், தயிர் சாதம், புளியோதை, வெண் பொங்கல் போன்ற சாதங்கள் 20 ரூபாய்க்கு வழங்குகின்றனர். இதன் அளவும் அதிகம். 20 ரூபாய்க்கு சாதம் வாங்கினால் சாம்பார், மோர், ஏதாவது ஒரு வகை வடகம், சில நேரங்களில் காய்கறி கூட்டு வழங்குகின்றனர். இந்த 20 ரூபாய் சாதமே மாணவர்களுக்கு போதுமானதாகி விடுகிறது. கூடுதலாக ஏதாவது வேண்டுமென்றால் வடை வாங்குகின்றனர். வடையின் விலை 5 ரூபாய் மட்டுமே. ஆக மொத்தம் மதிய உணவு 25 ரூபாயில் முடிந்து விடுகிறது.
ஒரு சாப்பாடே 40 ரூபாய் தான். தாராளமாக இருவர் சாப்பிடலாம். படிக்கும் மாணவ, மாணவிகள் என்பதால் போலீஸ் கேண்டீனில் பணிபுரியும் ஆண், பெண் போலீசார் அத்தனை பேரும் எந்த சூழ்நிலையிலும் முகம் சுளிப்பதில்லை. இன்முகத்துடனே பறிமாறுகின்றனர். அவர்கள் அன்புடன் சாதம் வழங்குவதே மாணவர்களுக்கு பிடித்து விடுகிறது. இதனால் இங்கு சாப்பிட வந்து விடுகின்றனர்.
தவிர வீட்டில் இருந்து சாதம் கொண்டு வருபவர்கள், போலீஸ் கேண்டீனில் இலவசமாக சாம்பார், காய், மோர் வாங்கிக் கொள்கின்றனர். இங்கு சமைக்கப்படும் கலவை சாதங்களில் பதப்படுத்தப்பட்ட பொடிகள் பயன்படுத்துவதில்லை. லெமன் சாதத்திற்கு ஒரிஜினல் எழுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து பயன்படுத்துகின்றனர். தக்காளி சாதத்திற்கு ஒரிஜனல் தக்காளி தான். புளியோதரைக்கும் புளிக்கரைசல் தான் பயன்படுத்துகின்றனர். பொடிகளோ, பாக்கெட் வகைகளோ பயன்படுத்துவதில்லை. இதனால் மாணவர்களின் வயிற்றையும் கெடுப்பதில்லை.
எஸ்.பி., அலுவலக கேண்டீன் தொடங்கப்பட்டதில் இருந்து ஐ.டி.ஐ., மாணவர்கள், யாரும் பசியுடன் இருந்ததில்லை என போலீஸார் கூறுகின்றனர். காரணம் சில நேரம் பணம் இல்லாவிட்டாலும், அடுத்து தரும் போது வாங்கிக் கொண்டு உணவு கொடுத்து விடுகின்றனர். எஸ்.பி. அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்களும் இங்கு தான் சாப்பிடுகின்றனர். போலீஸாரின் சேவையை பொதுமக்கள் மிகுந்த திறந்த மனதுடன் பாராட்டுகின்றனர்.