தேனியில் போக்குவரத்தை சீர்படுத்த கிடுக்குப்பிடி போடும் போலீசார்

தேனியில் போக்குவரத்தை சீர்படுத்த போலீசார் கிடுக்குப்பிடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Update: 2024-06-08 04:14 GMT

தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் நோ பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

தேனியில் மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு இரண்டும் மிகப்பெரிய அளவில் அகலமான சாலைகள். இருப்பினும் ரோட்டோர கடைகள், வாகன நிறுத்தங்கள் என இருபுறமும் ஏற்படும் எதிர்மறை நிகழ்வுகளால் இந்த சாலைகளை போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத அளவு நெரிசல் ஏற்பட்டு வருகிறது. தேனியில் மதுரை சாலையை கடப்பது என்பது எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு ஒப்பானது ஆகும். அந்த அளவு நெரிசலும், விபத்து அபாயமும் நீடிக்கிறது.

பெரியகுளம் சாலை அதனை விட மிக, மிக சிரமம் நிறைந்த அபாயகரமான சாலையாக மாறிப்போனது. இரண்டு சாலைகளுக்கும் மாற்று சாலைகள் இல்லை. இந்த சாலைகள் மட்டும் தானா என கேட்காதீர்கள். கம்பம் சாலையும் இருக்கிறது. மதுரை சாலையில் கணபதி சில்க்ஸ் கடையில் இருந்து கம்பம் சாலையில் ஏ.பி.எம்., ஹோட்டல் வரை சென்று விட்டால், அதேபோல் பெரியகுளம் ரோட்டில் கான்வென்டில் இருந்து ஏ.பி.எம்., ஹோட்டல் வரை சுமார் ஒண்ணேகால் கி.மீ., துாரம் மட்டுமே இருக்கும். இந்த துாரத்தை கடக்க 25 நிமிடங்களுக்கும் மேல் ஆகும். இந்த 25 நிமிடங்களும் வெயிலில் சிக்கி தவித்து சிரமப்பட்டே செல்ல வேண்டும். கம்பம் சாலையிலிருருந்து நகருக்குள் வரும் போதும் இதே சிக்கல் தான்.

குறிப்பாக நேரு சிலை சிக்னல் மிக, மிக நெருக்கடி நிறைந்த இடமாக மாறி விட்டது. இங்குமட்டுமல்ல, புதிய பஸ்ஸ்டாண்டிற்குள் வாகனங்கள் சென்று வருவதே மிகப்பெரிய சாதனை என்ற அளவுக்கு மோசமான சூழல் நிலவுகிறது. வாகனங்களின் இருபுறமும் டூ வீலர்களை பார்க்கிங் சென்று விட்டு, பல மணி நேரம் கழித்து வந்து எடுக்கின்றன.

இப்படிப்பட்ட வாகனங்களுக்கு பைன் போடுங்கள் என டி.எஸ்.பி., பார்த்திபன் அதிரடி உத்தரவிட்டார். இதனால் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் நோபார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட வாகனங்களை பைன்களை தீட்டி விட்டனர். பைன் போட்டு அதற்கான ரசீதையும் வாகனத்தில் சொருகி வைத்து விட்டனர். முதல் முறை 500 ரூபாய் பைன், இரண்டாம் முறை 1500 ரூபாய் பைன், மூன்றாம் முறை 5000ம் ரூபாயினை பைன் தொகை நெருங்கி விடும். இப்படி தெண்டம் கட்டுவதற்கு வாகனத்தையே விற்று விடலாம் என்று பலரும் முடிவுக்கு வருவார்கள். ஆனால் பைன் தொகையினை கிளீயர் செய்யாமல் வாகனத்தை விற்கவே முடியாது. போலீசார் எவ்வளவு தான் முயற்சிகள் செய்தாலும், பெருகி விட்ட வாகன நெரிசலும், ஆக்கிரமிப்பும், அரசியல்வாதிகளின் பக்கபலமும் போலீசாரின் முயற்சிகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக திகழ்ந்து வருகின்றன.

Tags:    

Similar News