ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது என்ன?
Pmk Alliance With BJP நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின்னரே ராமதாஸ் பா.ஜ.க.,வுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
Pmk Alliance With BJP
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் தலைமை நிர்வாகிகள் பங்கேற்ற உயர்மட்ட குழு கூட்டம் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டங்களுக்குப் பின் கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பாஜக கூட்டணியில் பாமக இடம் பெறுகிறது என்று அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை 6.40க்கு தைலாபுரம் தோட்டத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்தனர். அவர்களை அன்புமணி வாசலுக்கு வந்து வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். பின்னர் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை அண்ணாமலை மற்றும் எல்.முருகனுக்கு அறிமுகப்படுத்தினார். அதேபோல அண்ணாமலையும் பாஜகவினரை அறிமுகப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து சிறிதுநேரம் அவர்கள் உரையாடிவிட்டு சிற்றுண்டி சாப்பிட சென்றனர். இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலரும் சிற்றுண்டியில் பங்கேற்றனர். பின்னர் தேர்தல் ஒப்பந்தத்தை எல்.முருகன் ராமதாஸிடம் கொடுத்தார். அதை படித்து பார்த்த ராமதாஸ் சற்று முகத்தை சுருக்கினார்.
ராஜ்ய சபா சீட் பாமக எதிர்பார்த்திருந்தது. ஆனால் ஒப்பந்தத்தில் அது பற்றிய எந்த தகவலும் இடம்பெறவில்லை என்பதால் ராமதாஸின் முகம் சுருங்கியதாக சொல்லப்படுகிறது.
இதன் பின்னர் ராமதாஸ், அன்புமணி, எல்.முருகன், அண்ணாமலை ஆகியோர் தனி அறையில் ஆலோசனை செய்தனர். கிட்டத்தட்ட அரைமணி நேர ஆலோசனைக்குப் பின் 7.50க்கு வெளியே வந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.